தமிழகத்தில் சிண்டிகேட் வங்கியின் இந்தி திணிப்பு!
சென்னை:கர்நாடகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சிண்டிகேட் வங்கியில் இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து வரும் 20ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிண்டிகேட் வங்கிக்கான எழுத்தர்கள் மற்றும் அலுவலர்களுக்கான தேர்வுகள் தற்போது நடந்து வருகின்றன.
இதற்கு விண்ணப்பிப்போர் இந்தி மொழியைக் கற்றிருக்க வேண்டும் எனவும் அற்குரிய தகுதிச் சான்றிதழை இணைத்திட வேண்டும் எனவும் விதிமுறை வகுத்துள்ளனர்.
இந்த முயற்சியானது, தமிழகத்தில் இந்தியைத் திணிக்க நடக்கும் முயற்சியாகும். மேலும், தகுதியில்லையென்று கூறி இந்த வங்கியில் தமிழர்களைப் புறக்கணிக்கும் வஞ்சக செயலாகும். தமிழகத்தில் கிளைகள் நடத்திக் கொண்டு இந்த வேலையை சிண்டிகேட் வங்கி செய்கிறது.
இந்தப் போக்கைக் கண்டித்து சிண்டிகேட் ஊழியர்கள் ஆங்காங்கே போராடி வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகளும் இந்த இந்தித் திணிப்புச் செயலை வன்மையாக கண்டிக்கிறது.
அத்துடன் தமிழக முதல்வர் கருணாநிதி, தி.க. தலைவர் கி.வீரமணி ஆகியோரும் கண்டித்துள்ளனர். ஆனாலும் சிண்டிகேட் வங்கி நிர்வாகம் அதைக் கண்டுகொள்வது போல இல்லை.
இந்த நிலையில் அவ்வங்கியில் வைப்பு நிதியாக வைத்துள்ள தமிழக அரசின் ஒட்டு மொத்தத் தொகையையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் சிண்டிகேட் வங்கியின் போக்கைக் கண்டித்து வருகிற 20ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications