சஞ்சய் தத் சிறையிலிருந்து விடுதலை
புனே:நடிகர் சஞ்சய் தத் இன்று காலை புனே அருகில் உள்ள எரவாடா சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
![]() |
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனையை அறிவித்தது மும்பை தடா நீதிமன்றம். இதையடுத்து அவர் புனே அருகில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி சஞ்சய் தத் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த உச்சநீதிமன்றம், சஞ்சய் தத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
அதன்படி, தடா நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் சஞ்சய் தத்துக்கு வழங்கப்படும் வரை அவர் ஜாமீனில் இருக்கலாம். தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் அவர் தடா நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.
மேலும் உள்ளூர் காவல் நிலையத்தில் தினசரி ஆஜராக வேண்டும் எனவும் சஞ்சய் தத்துக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடா நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் தடா நீதிமன்றம் எரவாடா சிறைக்கு தீர்ப்பு நகலை அனுப்பி வைத்தது. இந்த நடவடிக்கைகள் தாமதமானதால் சஞ்சய் தத் விடுதலை ஆவது 2 நாட்களாக தடைபட்டது.
இந்த நிலையில் இன்று காலை 05-30 மணிக்கு, முதல் ஆளாக சஞ்சய் தத் ஜாமீனில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரை அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் அழைத்துச் சென்றனர்.
சஞ்சய் தத்தைப் பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்களும் சிறைக்கு வெளியே திரண்டிருந்தனர். அனைவரும் சஞ்சய் தத்தை வாழ்த்தி கோஷமிட்டனர்.













Click it and Unblock the Notifications