தமிழகத்தில் ரயில் மறியலால் ஸ்தம்பித்த கேரளா:சிக்னல்கள் உடைப்பு-ஸ்லீப்பர் கட்டைகள் அகற்றம்

Subscribe to Oneindia Tamil

சேலம்&கோவை:கேரள ரயில்களை மறிக்கும் போராட்டம் இன்று அதிகாலை முதல் தொடங்கியது. சேலம், கோவை, ஈரோடு, நெல்லை, திருப்பூர் ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் கேரள ரயில்களை தடுத்து நிறுத்திப் போராட்டம் செய்து கைதாகினர்.

இதனால் 10க்கும் மேற்பட்ட கேரள ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

அதிகாலை திருப்பூர் ரயில் நிலையத்தில் திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில்...

திருப்பூர் ரயில் நிலையத்தில் திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாலை 4 மணிக்கு டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் செல்ல வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை அவர்கள் மறித்து நிறுத்தினர். இந்தப் போராட்டத்தால் ரயில் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. பின்னர் போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

கோவையில்...

கோவை ரயில் நிலையத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கூடி ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

கோரிக்கையை அடையும் வரை போராட்டம் தொடரும். கோவை, திருப்பூர் பகுதிகள் சேலம் கோட்டத்துடன் இருக்க வேண்டும். பாலக்காடு கோட்டம் எங்களுக்கு வேண்டாம் என்று அவர் உறுதியாக கூறினார்.

இதேபோல கோவை அருகே போத்தனூரிலும் ரயில் மறியல் நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து கோவை செல்லும் ரயிலை அவர்கள் தடுத்து நிறுத்தி மறியல் செய்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தண்டவாளத்தில் டிபன்:

அதேபோல வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலையும் நூற்றுக்கணக்கானோர் மறித்தனர். ரயிலை மறித்து நிறுத்தி தண்டவாளத்தில் அமர்ந்தனர். அங்கு அமர்ந்து காலை டிபனை சாப்பிட்டனர். இதனால் ரயிலில் இருந்த பயணிகள் டென்ஷன் ஆனார்கள்.

நீண்ட நேரத்திற்குப் பின்னர் அனைவரையும் போலீஸார் கைது செய்து கல்யாண மண்டபத்தில் போய் அடைத்தனர். பின்னர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக கிளம்பி கோவைக்குச் சென்றது.

அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் அந்த ரயிலை மறித்து நிறுத்தினர். சிலர் ரயில் என்ஜின் மீது ஏறி அமர்ந்தனர். தொடர்ந்து ஏராளமானோர் அணி அணியாக வந்து ரயிலை மறித்தனர். பின்னர் அனைவரையும் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

போராட்டம் காரணமாக கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டது.

கோவை வழியாக கேரளா செல்லும் அனைத்து ரயில்களும் திருப்பூர் வழியாகத்தான் போக வேண்டும். ஆனால் திருப்பூரில் போராட்டம் படு தீவிரமாக இருந்ததால் இன்று காலை முதல் கோவைக்கு ஒரு கேரள ரயிலும் வரவில்லை. அதேபோல இன்று காலை முதல் கேரளாவிலிருந்து எந்த ரயிலும் கிளம்பவில்லை.

சேலத்தில் வீரபாண்டியார் தலைமையில் ..

இதற்கிடையே, பீகார் மாநிலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழைக்குச் செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க சேலம் ரயில் நிலையம் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் இவர்கள் ரயிலை மறிக்க காத்திருந்தனர். காலை 9 மணிக்கு அந்த ரயில் வருவதாக இருந்தது. ஆனால் ரயில் சேலம் ரயில் நிலையத்திற்கு வரவில்லை.

இதையடுத்து கோரக்பூரிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலை அவர்கள் மறித்தனர்.

போராட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம், துணை சபாநாயர் வி.பி.துரைசாமி, சேலம் மேயர் ரேகா பிரியதர்ஷினி, எம்.எல்.ஏக்கள் ராஜேந்திரன், ராஜா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பாமகவினரும் பெரும் திரளாக வந்திருந்தனர். பாமகவினர் கொண்டு வந்திருந்த கொடிக் கம்புகள் பெரும் கம்புகளாக இருந்ததைப் பார்த்தபோது, எதற்கும் தயாராகவே அவர்கள் வந்திருந்ததை உணர முடிந்தது.

ஈரோட்டில் அமைச்சர் தலைமையில்..

ஈரோட்டில், கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா தலைமையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்தனர்.

சென்னை - கோவை ரயிலை மறித்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் திமுக, பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர்.

பயணிகள் கல்வீச்சு, தடியடி:

ஊத்துக்குளியில், பெங்ளூர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பரிதவித்தனர். சில பயணிகள் ஆத்திரமடைந்து என்ஜின் மீது கல்வீசித் தாக்கினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே சண்டை ஏற்படச்டு விடாமல் தடுக்க போலீஸார், பயணிகளை லேசான தடியடி நடத்தி கலைத்து விரட்டனர். இதனால் பயணிகள் பயந்து போய் ஓடினர்.

சிக்னல்கள் உடைப்பு, ஸ்லீப்பர் கட்டைகள் அகற்றம்:

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேலம் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 8 சிக்னல் விளக்குகளை கற்களால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

மேலும் சில இடங்களில் தண்டவாளத்தில் உள்ள ஸ்லீப்பர் கட்டைகளும் அகற்றப்பட்டன.

மேலும் சேலம் அருகே உள்ள சிவதாபுரம் என்ற இடத்தில் தண்டவாளத்தின் குறுக்கே மணல் கொட்டப்பட்டிருந்தது.

இதனால் போராட்டம் வாபஸ் பெற்ற பின்னரும் கூட இவற்றை சரி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் சாலை மறியல்:

சேலம் ரயில் கோட்ட விவகாரம் தொடர்பாக கேரளாவின் போக்கைக் கண்டித்து கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை-பாலக்காடு சாலையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நூற்றுக்கம் மேற்பட்ேடார் கலந்து கொண்ட இந்த மறியல் போராட்டத்தால் கேரளாவுக்கு வாகனப் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

ஸ்தம்பித்துப் போன கேரளம்:

இன்றைய அரை நாள் போராட்டத்திலேயே, கேரள மாநிலம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுடன் ரயில் ரீதியாக துண்டிக்கப்பட்டு, ஸ்தம்பித்துப் போனது. ஓணம் பண்டிகை நேரம் வேறு என்பதால் கேரளா திரும்பத் திட்டமிட்டிருந்த மலையாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.

ஓணம் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், ரயில் மறியல் போராட்டத்தால் மலையாளிகள் பெரும் கவலைக்குள்ளாகினர்.

ஒரு வழியாக லாலு பிரசாத் யாதவர் முதல்வர் கருணாநிதியிடம் உறுதிமொழி தந்ததால் போராட்டம் வாபசாகியது.

பல ரயில்களின் நேரங்கள் மாற்றம்:

ரயில் மறியல் போராட்டம் காரணமாக கோவை - ஜோலார்ப்பேட்டை மார்க்கத்தில் ரயில்கள் தாமதமாக இயங்கிக் கொண்டிருப்பதால் பல்வேறு ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில், திருவனந்தபுரம் - கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரத்திலிருந்து நாளை மாலை 5.20 மணிக்குப் புறப்படுவதற்குப் பதில் காலை 7.30 மணிக்குப் புறப்படும்.

அதோபோல இந்த ரயில் சென்னையிலிருந்து 26ம் தேதி இரவு 11.15 மணிக்குக் கிளம்புவற்குப் பதில் 28ம் தேதி அதிகாலை 1 மணிக்குப் புறப்படும்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படுவதாக இருந்த சென்னை சென்டிரல் - கோவை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், மாலை 5.30 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை சென்டிரல் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில், இரவு 7.30 மணிக்குப் புறப்படும்.

சென்னை சென்டிரல் - மங்களூர் மெயில் இரவு 9.45 மணிக்குப் புறப்படும்

கோவை - சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் கோவையிலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+