ராணுவத் தாக்குதலில் 9 புலிகள் பலி
கொழும்பு:இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் நடந்த கடும் சண்டையில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் 5 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
இலங்கையின் வட மேற்கில் உள்ள மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. வவுனியாவிலும் இந்த சண்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் நடந்த சண்டையில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், மன்னார் மாவட்டத்தின் இரண்டு பாதுகாப்பு நிலைகளில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் நடந்தது.
இதில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். 5 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இதுவரை மொத்தம் 1258 ராணுவ வீரர்கள், போலீஸார், கிராம ஊர்க்காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2000க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளனர் என்றார்.
இதற்கிடையே, கண்டி மத்தியப் பகுதியில், உள்ள சென்டிரல் ஹால் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை ராணுவம் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தது. அங்கு புத்த மத விழா நடந்த சமயத்தில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல மேலும் 2 குண்டுகளும் வெவ்வேறு பகுதிகளில் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications