கேரளாவை சாந்தப்படுத்த உருவாகிறதுவெஸ்ட் கோஸ்ட் ரயில்வே மண்டலம்?
டெல்லி:சேலம் கோட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் கேரளாவை சமாதானப்படுத்த வெஸ்ட் கோஸ்ட் ரயில்வே மண்டலத்தை உருவாக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில் ேகாட்டத்தை அமைக்க கேரள அரசு மிகக் கடுமையாக எதிர்ப்பு காட்டி வருகிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பிக்களும் மிக மிக ஒற்றுமையாக செயல்பட்டு, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் சேலம் கோட்டம் அமைந்த தீர வேண்டும் என தமிழகத் தரப்பில் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதை வலியுறுத்தி சேலம் கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் மாபெரும் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது.
இந் நிலையில் சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவை டெல்லி சென்று சந்தித்த கேரள முதல்வர் அச்சுதானந்தன், சேலம் கோட்டம் அமைப்பதில் ரயில்வே உறுதியாக இருந்தால், திருவனந்தபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே மண்டலத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த மண்டலத்தின் கீழ் பாலக்காடு, திருவனந்தபுரம், மங்களூர் ரயில் கோட்டங்களை இணைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தற்போது இந்தக் கோரிக்கையை ரயில்வே துறை தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிகிறது. அனேகமாக இந்த புதிய ரயில்வே மண்டலம் அமைக்கப்படும் என்பதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகியுள்ளன.
இந்த மண்டலத்திற்கு வெஸ்ட் கோஸ்ட் ரயில்வே என்று பெயரிடப்படும் என ரயில்வே இலாகாவில் பேச்சு எழுந்துள்ளது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பை ரயில்வே இலாகா வெளியிடக் கூடும் எனவும் தெரிகிறது. மலையாள விவரமா.. சும்மாவா?
லாலுவுக்கு பிரதமர் உத்தரவு:
இதற்கிடையே, சேலம் கோட்ட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, கேரள முதல்வர் அச்சுதானந்தன் ஆகியோரை குறிப்பிட்ட ஒரு நாளில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு லாலு பிரசாத் யாதவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரி ஒருவர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications