ராஜீவ் நினைவிடத்தில் பிரதீபா அஞ்சலி
ஸ்ரீபெரும்புதூர்:குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
![]() |
2 நாள் பயணமாக நேற்று மாலை சென்னை வந்த பிரதீபா பாட்டீல், இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார். இன்று காலை அவர் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீபெரும்புதூர் சென்றார்.
அங்கு அவருக்கு முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்குப் பிரதீபா பாட்டீல் சென்றார்.
அங்கு அஞ்சலி செலுத்திய அவர் சில நிமிடங்கள் மெளனமாக நினைவிடத்தைப் பார்த்தபடி நின்றார். அவருடன் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
பின்னர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்திற்கு வந்த பிரதீபா பாட்டீல் அங்கு புதிய கலையரங்கத்தைத் திறந்து வைத்தார்.
பிறகு தனது ஸ்ரீபெரும்புதூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்குத் திரும்பினார். அங்கிருந்து விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்றார் பிரதீபா பாட்டீல்.
குடியரசுத் தலைவர் பொறுப்பேற்ற பின் பிரதீபா பாட்டீல் மேற்கொண்ட முதல் வெளி மாநில பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று மாலை பிரதீபா பாட்டீல் சென்னை வந்து சேர்ந்தார். அவர் வந்தபோது பலத்த மழை பெய்தது. இதனால் விமானத்திலிருந்து இறங்கிய அவர் கார் மூலம் விமான நிலைய கட்டடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு முப்படைத் தளபதிகள், தமிழக ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக தலைவர் ஜி.கே.மணி, தலைமைச் செயலாளர் திரிபாதி, டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
வரவேற்பை முடித்துக் கொண்டு ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிரதீபா பாட்டீல். இரவு ஆளுநர் மாளிகையில், பிரதீபாவுக்கு பர்னாலா விருந்தளித்தார்.













Click it and Unblock the Notifications