நாளை பாக். திரும்புகிறார் ஷெரீப்;br/கைது செய்ய முஷாரப் தீவிரம்!
இஸ்லாமாபாத்:
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாளை பாகிஸ்தான் திரும்புகிறார். அவரை பாகிஸ்தானுக்குள் நுழைய விடாமல் விமான நிலையத்திலேயே கைது செய்ய முஷாரப் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் ஷெரீப் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் நாடே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு ரத்தம் சிந்தாத புரட்சியின் மூலம் ராணுவத் தலைமைத் தளபதி பெர்வேஸ் முஷாரப்பால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ஷெரீப். பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து 2001ம் ஆண்டு அவரை சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தினார் முஷாரப்.
அது முதல் சவூதியில் வசித்து வந்தார் ஷெரீப். சில காலத்திற்கு முன்பு அவர் லண்டனுக்கு இடம் பெயர்ந்தார். இந்த நிலையில், மீண்டும் நாடு திரும்ப அனுமதி கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தை அணுகினார் ஷெரீப். அதை ஏற்ற உச்சநீதிமன்றமும், ஷெரீப் பாகிஸ்தான் திரும்பலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் நாடு திரும்ப முடிவு செய்தார். நாளை பாகிஸ்தான் திரும்ப அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால் ஷெரீப் மீண்டும் நாடு திரும்பினால் மறுபடியும் அவரை நாடு கடத்துவோம். பாகிஸ்தானுக்குள் அவரை நுழைய விட மாட்டோம் என முஷாரப் அரசு எச்சரித்துள்ளது.
ஆனால் இந்த எச்சரிக்கையை நிராகரித்துள்ளார் ஷெரீப். இதுகுறித்து லண்டனில் அவர் கூறுகையில், நான் நாடு கடத்தப்படுவதற்கு முன்பு ஐந்து ஆண்டுகள் மட்டுமே வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டும் என்று சர்வாதிகாரியின் (முஷாரப்) சார்பில் என்னை சந்தித்தவர்கள் கூறினர். ஆனால் தற்போது 10 ஆண்டுகள் நான் நாடு திரும்பக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டதாக முஷாரப் பொய் பேசுகிறார்.
படுகொலை செய்யப்பட்ட லெபனான் பிரதமர் ரபீக் ஹரிரியின் மகன் சாத் ஹரிரிதான் சவூதி அரேபிய அரசின் சார்பில் என்னிடம் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
சமீபத்தில் அவர் என்னை லண்டனில் வந்து சந்தித்தபோது, நான் பாகிஸ்தான் திரும்பினால் அது ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றார். முஷாரப்புடன் சேர்ந்து கொண்டு அவரும் பொய் சொல்கிறார்.
பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகம் தழைக்கவும், நாட்டில் ஒற்றுமை ஓங்கவும், மக்கள் அமைதியுடன் வாழவும், சர்வாதிகாரத்திலிருந்து பாகிஸ்தானை மீட்கவுமே நான் நாடு திரும்புகிறேன். எனது திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. நான் பாகிஸ்தான் செல்வது நிச்சயமானது என்றார் ஷெரீப்.
இதற்கிடையே, ஷெரீப் பாகிஸ்தான் திரும்பினால் அவரைக் கைது செய்வதற்காக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் போலீஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஷெரீப் கட்சித் தொண்டர்களையும் பாகிஸ்தான் போலீஸார் கைது செய்து வருகின்றனர். நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷெரீப் எந்த விமானத்தில் வருகிறார், எப்போது வருகிறார், எங்கு வந்து இறங்கப் போகிறார் என்பதை ஷெரீப் கட்சியினர் ரகசியமாக வைத்துள்ளனர். இருப்பினும் இஸ்லாமாபாத் நகருக்கு ஷெரீப் கட்சியினர் அலை கடலென திரண்டு வந்து கொண்டுள்ளனர். ஷெரீப் வருகையையொட்டி பாகிஸ்தான் முழுவதும் பரபரப்பு கூடியுள்ளது.
வாஜ்பாயை கைவிட்டு விட்டேன்: ஷெரீப் வருத்தம்!
இதற்கிடையே, சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு நவாஸ் ஷெரீப் அளித்த ஒரு பேட்டியில் கார்கில் விஷயத்தில் நான் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டேன். அவரை நான் கைவிட்டு விட்டேன் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
தனது பேட்டியின்போது ஷெரீப் கூறுகையில், நான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், கார்கில் போர் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவேன்.
கார்கில் குழப்பத்துக்கு முழுப் பொறுப்பும் முஷாரப்தான். எனக்குத் தெரியாமலேயே கார்கில் யுத்தத்தை அவர் தொடங்கி விட்டார். அந்த சமயத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு நன்கு மேம்பட்டிருந்தது. இரு நாடுகளும் நேசக் கரம் நீட்டத் தொடங்கியிருந்தன. ஆனால் முஷாரப் இதைக் குலைத்து விட்டார்.
முஷாரப் மீது நான் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் விட்டதற்காக இப்போது வருத்தப்படுகிறேன்.
கார்கில் சம்பவத்திற்குப் பிறகு வாஜ்பாய் கூறுகையில், பாகிஸ்தான் பிரதமர் என்னை கை விட்டு விட்டார் என்றார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவர் சொன்னது முழுக்க முழுக்க சரிதான்.
கார்கில் சம்பவம் தொடர்பாக விசாரிக்க இந்தியாவில் கமிஷன் அமைக்கப்பட்டது. அப்படிப்பட்ட கமிஷனை நானும் அமைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டதற்காக ஏமாற்றமாக உணர்கிறேன்.
இந்தியாவும், பாகிஸ்தானும் நட்போடும், அமைதியுடனும் இயங்க வேண்டும்.
இரு நாட்டு வரலாற்றிலும் கார்கில் சம்பவம் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகி விட்டது. அந்த வருத்தம் என்னிடம் இன்னும் உள்ளது. அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது என நான் விரும்புகிறேன் என்றார் ஷெரீப்.












Click it and Unblock the Notifications