அடுத்த வாரம் 3வது அணி கூட்டம்; ஜெ. நீடிப்பாரா, விலகுவாரா?
டெல்லி:
3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெறுகிறது. கூட்டணியில் அதிமுக நீடிக்கிறதா, இல்லையா என்பது இக்கூட்டத்தில் தெரிய வரும்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பு 3வது அணி உதயமானது. ஆனால் தேர்தல் நாளன்றே அந்த அணி பிளவுபட்டுப் போனது. குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற கூட்டணியின் முடிவை கூட்டணி உருவாக அரும்பாடுபட்ட ஜெயலலிதாவை உதறித் தள்ளியதால் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் குழம்பிப் போனார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில், 3வது அணியில் நாங்கள் இருக்கிறோமா, இல்லையா என்றே தெரியவில்லை. எங்களை எதற்கும் கூப்பிடுவதில்லை என்று ஜெயலலிதா புலம்பினார்.
இதற்குப் பதிலளித்த முலாயம் சிங் யாதவின் கட்சி தலைவர் அமர்சிங், ஜெயலலிதாவுக்குப் போன் செய்தால் அவர் கிடைப்பதே இல்லை. அவரது உதவியாளர்தான் பேசுகிறார் என்றார்.
இந்த நிலையில், 3வது அணியின் கூட்டம் டெல்லியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதில், கூட்டணியில் நிலவும் கருத்து வேறுபாடுகளை களைவது, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார் நிலையில் இருப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஆனால் அதிமுக கூட்டணியில் நீடிக்கிறதா, இல்லையா என்பதை முடிவு செய்யும் முக்கியக் கூட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இதில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வருகிற 26ம் தேதி இக்கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து இந்திய தேசிய லோக்தள் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா கூறுகையில், கூட்டணிக்குள் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளை களைவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.
ஜெயலலிதாவைப் பொருத்தவரை யாருடன் கூட்டணி என்பதில் தற்போது அவர் குழம்பிப் போயுள்ளதாக தெரிகிறது. 3வது அணியினர் தன்னைப் புறக்கணிப்பதாகவும் அலுத்துக் கொள்கிறார். மறுபக்கம் பாஜக தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார்.
இதனால் இரு கூட்டணியையும் சம தொலைவில் வைத்திருக்க ஜெயலலிதா தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. அதேசமயம், பாஜகவுடன் மிகவும் நெருங்கிப் போய் விடாமல் கவனமாக இருக்கிறார் ஜெயலலிதா.
ஒரு வேளை இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளாவிட்டாலும் கூட கூட்டத்தைப் புறக்கணிக்காமல் 2ம் மட்டத் தலைவர்களை கூட்டத்துக்கு அவர் அனுப்பி வைக்கக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications