பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயராது-மத்திய அரசு
திருவனந்தபுரம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் திட்டம் ஏதுமில்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு உயர்த்தும் என கருதப்பட்டது.
இந்த விலை உயர்வால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன. இதற்கு முன் பலமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்த மத்திய அரசை எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டன. ஆனால் மத்திய அரசு அனுமதி தரவில்லை.
இந்நிலையில் இந்த விலை உயர்வு மத்திய பெட்ரோலிய அமைச்சகத்துக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.
இனியும் பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்தாவிட்டால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.52,452 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.
இதனால் பெட்ரோல் விலையை குறைந்த பட்சம் லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் ஆலோசனை நடத்தியது. ஆனால் விலையை உயர்த்த கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந் நிலையில் திருவனந்தபுரம் அருகே கோவளத்தில் இன்று நடந்த கருத்தரங்கில் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா கலந்து கொண்டார். அவர் பேசுகையில்,
கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் உயருவதால், மத்திய அரசுக்கு அதிக நிதிச் சுமை ஏற்பட்டு வருகிறது. ஆனால் இந்த சுமையை வாடிக்கையாளர்கள் மீதோ அல்லது நடுத்தர வர்க்கத்தினர் மீதோ சுமத்த விரும்பவில்லை.
ரூ.25,000 கோடிக்கு பத்திரங்கள் வெளியிட்டு அதன்மூலம் நிதி திரட்டப்பட்டு நிலைமை சமாளிக்கப்படும்.
இதனால் தற்போது விலை உயராது. நடுத்தர மக்களின் நலன் கருதி காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சமையல் எரிவாயு மற்றும் கெரசின் விலையை கண்டிப்பாக உயர்த்தாது.












Click it and Unblock the Notifications