மனைவியின் பென்சனுக்காக தீக்குளிக்க முயன்ற கணவர்!
திண்டுக்கல்:
மனைவியின் பென்சன் தொகை தனக்கு கிடைக்காத ஆதங்கத்தில் தீக்குளிக்க முயன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
துத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பாராவ். இவரது மனைவி அமராவதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்பிளியாபட்டியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
அமராவதி சமீபத்தில் விபத்து ஒன்றில் மரணமடைந்து விட்டார். அமராவதி வாரிசுபடி பணிக்கால பலன்கள் ஆகியவற்றை தனக்கு தருமாறு கணவர் சுப்பாராவ் திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தார்.
அதே போன்று அமராவதியின் தந்தை ஆண்டியும் அமராவதி வாரிசுபடி பணிக்கால பலன்கள் ஆகியவற்றை தனக்கும் அமராவதியின் அக்கா மகளுக்கும் தருமாறு திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தார்.
இரு தரப்பினரிடமிருந்து பென்சன் தொகை தரக்கேட்டு விண்ணப்பம் வந்திருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகம் அமராவதியின் வாரிசுபடி பணிக்கால பலன்கள் தருவதை நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகம் வந்த சுப்பாராவ் அமராவதியின் வாரிசு சான்றிதழை எடுத்து பார்க்க அதிகாரிகளிடம் வேண்டினார். அதன்படி அதிகாரிகள் வாரிசு சான்றிதழை எடுத்து பார்த்த போது தனது வாரிசாக கணவர் சுப்பாராவை, அமராவதி குறிப்பிட்டிருந்தார்.
எனவை தனக்கு வழங்க வேண்டிய தனது மனைவி அமராவதியின் வாரிசுபடி பணிக்கால பலன்கள் ஆகாயவற்றை நிறுத்தி வைத்திருந்ததை கண்டித்து மனமுடைந்த அவர் நேற்று திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலம் முன்பு மண்ணெண்ணை கேனுடன் வந்து மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அவரை திண்டுக்கல் மாவட்ட கல்வி அதிகாரிகள் காப்பாற்றி தீக்குளிப்பு சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுப்பாராவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications