அந்நிய செலாவணி மோசடி வழக்கு- 'தாமதத்திற்கு சசிகலா தான் காரணம்'
சென்னை:
அந்நிய செலாவணி மோசடி வழக்கு காலதாமதம் ஆனதற்கு சசிகலாவின் வழக்கறிஞர்கள் தான் காரணம் என்று மத்திய அமலாக்கப் பிரிவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 1997ம் ஆண்டு என்மீது வழக்கு பதிவு செய்து என்னை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவொரு விசாரணையும் நடக்கவில்லை.
இந்நிலையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திடீரென்று சம்மன் அனுப்பி, டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி சில சாட்சியங்களின் பட்டியலை கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். இது முற்றிலும் சட்டவிரோதமானதாகும். ஆகவே, என் மீதான வழக்கை கைவிட வேண்டும் என்று மனுவில் சசிகலா கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விராணைக்கு வந்த போது, மத்திய அமலாக்கப்பிரிவு சிறப்பு இயக்குனர் மோகன்தாஸ் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், அந்நிய செலவாணி மோசடி வழக்கின் விசாரணையை விரைவாக நடத்த விடாமல் சசிகலா தரப்பு தான் தொடர்ந்து வாய்தா வாங்கியது.
இதற்கிடையில் ஃபெரா சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு டெமா சட்டமாக கொண்டு வரப்பட்டது.
இவ்வளவு நாட்கள் காலதாமதம் ஆனதற்கு சசிகலாவும், அவர்களது வக்கீல்களும் தான் காரணம். காபிபோசா சட்டத்தின் கீழ் சசிகலா கைது செய்யப்பட்டதற்கும், இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்துவதற்கு தான் அவர்கள் தரப்பு சாட்சியங்களின் பட்டியலை கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம்.
ஒவ்வொரு முறையும் நாங்கள் அனுப்பும் நோட்டீசை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கினை இழுத்தடித்துள்ளார்கள். எனவை இந்த நோட்டீசை ரத்து செய்யக்கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
சசிகலா தரப்பு வக்கீல் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க காலஅவகாசம் கேட்டு கொண்டதற்கிணங்க, நீதிபதி தனபால் விசாரணையை அடுத்தமாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications