சவூதியைக் குறி வைக்கும் இந்திய பல்கலைக்கழகங்கள்
ரியாத்:
இந்தியாவைச் சேர்ந்த பல்
வேறு பல்கலைக்கழகங்கள் சவூதி அரேபியாவில் தேர்வு மையங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.
சவூதியில் தற்போது இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் ரியாத், ஜெட்டா மற்றும் டமாம் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்களை நிறுவியுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மெளலானா பல்கலைக்கழகம் ஆகியவை ரியாத் மற்றும் ஜெட்டாவில் தேர்வு மையங்களை தொடங்கியுள்ளன.
இதன் மூலம் சவூதியைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களது உயர் கல்வியை இந்தப் பல்கலைக்கழகங்களில் சவூதியில் இருந்தபடியே படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலும் பல இந்தியப் பல்கலைக்கழகங்கள் இங்கு தேர்வு மையங்களைத் தொடங்கவுள்ளன.
ரியாத்தில் 26ம் தேதி ஓஸ்மானியா பல்கலைக்கழக பழைய மாணவர் என்.ஆர்.ஐ சங்கத்தின் வருடாந்திர விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இந்திய தூதரகத்தின் உதவி அதிகாரி ராஜீவ் சஹாரே இத்தகவலைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், மேலும் பல இந்தியப் பல்கலைக்கழகங்களும் தங்களது தேர்வு மையங்களை இங்கு அமைக்க உள்ளன. சவூதியில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்தியத் தூதரகத்தில் மொத்தம் 200 அதிகாரிகள்தான் உள்ளனர்.
இந்தியத் தூதரகத்தில் மிகவும் குறைவான வசதிகளே உள்ளன. ரியாத்தில் உள்ள தூதரகம், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன.
இந்தியத் தூதரகத்தின் பணியில் அனைத்து சமுதாயத்தினரும் உறுதுணையாக இருக்க வேண்டும். சமுதாய நல நிதிக்கு இந்தியர்கள் அனைவரும் தாராளமாக உதவ வேண்டும் என்றார் அவர்.
பழைய மாணவர் என்.ஆர்.ஐ சங்க பொதுச் செயலாளர் ஷா சுபானி வருடாந்திர அறிக்கையை வாசித்தார். டாக்டர் சாஜித் அப்பாசி குரான் குறித்த அறிக்கையை வாசித்தார்.
இந்திய சமுதாய நல நிதிக்கு பழைய மாணவர் என்.ஆர்.ஐ சங்க தலைவர் டாக்டர் முகமமது நியாஸ் கான் 3000 ரியால்கள் அன்பளிப்பாக வழங்கினார்.












Click it and Unblock the Notifications