சட்டத்தை மக்கள் கையில் எடுக்க உரிமை இல்லை - நீதிபதி சதாசிவம்
மதுரை:
மக்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டால் அதை நீதிமன்றங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாங்களே முன்வந்து தட்டிக் கேட்போம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம் கூறியுள்ளார்.
மதுரையில் சோகோ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த, கல்லூரி மாணவர்களுக்கான 15 நாள் மனித உரிமை பயிலரங்கின் நிறைவு விழாவில் நீதிபதி சதாசிவம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், பீகார் மாநிலத்தில் சமீபகாலமாக திருடர்ளை மக்களே அடித்துக் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து விட்டன.
திருடர்களைப் பிடிப்பதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அவர்களைக் கொல்வதற்கு சட்டம் எந்த உரிமையையும் தரவில்லை. இதேபோல அதே பீகாரில், ஒரு திருடனை போலீஸார் மோட்டார் சைக்கிளில் வைத்து இழுத்துச் சென்று சித்திரவதை செய்துள்ளனர்.
இவையெல்லாம் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் ஆகும். மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. சட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி செய்தால் அதை நீதிமன்றங்கள் வேடிக்கை பார்க்க முடியாது. நாங்களாகவே முன்வந்து நடவடிக்கை எடுப்போம்.
காவல் நிலையங்களில் கைதிள் இறக்கும் சம்பவங்களும் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications