ஜெ.வுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: 'உண்மையான' இசட் பிளஸ் பாதுகாப்பை தனக்கு வழங்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2 நாளில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்த விவரத்தை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்குள் தண்டபாணி என்ற நபர் அத்துமீறி உள்ளே நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திமுக அரசு குறைத்து விட்டதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஜெயலலிதாவின் புகாருக்குப் பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டது. கூடுதல் பாதுகாப்பு தேவை என்று அவர் கோரினால் அதையும் வழங்க அரசு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு 'உண்மையான' இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
எனது ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் தடை விதித்தேன். இது மட்டுமல்லாமல், தமிழ் தேசிய மீட்புப் படை, நக்சலைட்டுகள் ஆகியோருக்கும் தடை விதித்தேன். 2004ம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பனை ஒழித்து வனப் பகுதி மக்களுக்கும், வன அதிகாரிகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்தேன்.
இப்போதைய ஆட்சியில் அரசியல் ரீதியாக என்னை ஒழித்துக் கட்ட பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. நான் முதல்வராக பதவியில் இல்லாதபோதெல்லாம் எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு பெருமளவில் குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் பலமுறை எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி ஜோஸ்வா கார்த்திகேயன் என்பவர் தனது வாகனத்தை எனது வீட்டின் கேட்டில் மோத வைத்து வீட்டுக்குள் நுழைய முயற்சித்தார். இப்படிப்பட்டவரை மன நிலை பாதித்தவர் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்து விட்டனர்.
இதேபோல கடந்த 16ம் தேதி தண்டபாணி என்பவர் எனது வீட்டுக்குள் நுழைந்து, மாடி வரை வந்து விட்டார். இதுதொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தோம். ஆனால் இவரையும் மன நிலை பாதிக்கப்பட்டவராக கூறி விடுவார்கள்.
கடந்த 16ம் தேதி சம்பவத்திற்குப் பிறகு ஒரு வாரமாகியும், இதுவரை ஒரு போலீஸ்காரர் கூட என்னிடம் வந்து விசாரிக்கவில்லை. ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்களை போலீஸ்காரர்கள் பாதுகாப்பது கடமையாகும்.
எனக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு தெரிவிக்கப்படது போல எனக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை.
நடந்த சம்பவம் குறித்து டிஜிபி, காவல்துறை ஆணையர் ஆகிேயாரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு ஷிப்ட்டுக்கு 57 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இசட் பாதுகாப்பு உள்ள எனக்கு அந்த பாதுகாப்பை வழங்கவில்லை.
இசட் பாதுகாப்பு விதிமுறைப்படி உள்ள பாதுகாப்பை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும். கீழ்க்கண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எனக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்.
- எனது வீட்டைச் சுற்றிலும் வெடிகுண்டுகள் உள்ளதா, ஆயுதங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய அடிக்கடி சோதனை நடத்த வேண்டும்.
- மோப்ப நாய்கள் சகிதம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
- எனது வீட்டின் வழியாக செல்லக் கூடிய வாகனங்களை அடிக்கடி சோதனையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்மம்.
- வாகனங்களுக்குக் கீழே வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய சோதனை நடத்த வேண்டும்.
- எனது வீட்டின் முன்புறம் மெட்டல் டிடெக்டர் கருவியைப் பொருத்த வேண்டும்.
- தபால் மூலம் குண்டுகள் அனுப்பப்படுவதைக் கண்டுபிடிக்க அதற்குரிய கருவியை வைக்க வேண்டும்.
- எனக்கு 2 குண்டு துளைக்காத வாகனங்களை வழங்க வேண்டும்.
- ஒரு ஆம்புலன்ஸ் தர வேண்டும். அந்த ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர், ரத்தம், ஸ்டிரெட்சர் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும்.
- எனது வீட்டின் சுற்றுப்புறத்தில் செல்போன்களை செயலிழக்க வைக்கக் கூடிய ஜாமர் வாகனத்தை வழங்க வேண்டும். வாகனத்தை ஓட்ட போலீஸ் டிரைவர்களை நியமிக்க வேண்டும்.
- எனது வீட்டைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும்.
- பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோருக்கு வாக்கி டாக்கி தர வேண்டும்.
- பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு டீசல் வாகனத்தை வழங்காமல் பெட்ரோல் வாகனங்களை மட்டுமே தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அந்த மனுவில் வைத்துள்ளார் ஜெயலலிதா.
இந்த மனு இன்று நீதிபதி சுகுணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் ஜோதிக ஆஜரானார். அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் விடுதலை ஆஜரானார்.
அவர் கூறுகையில்,
ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தனக்கு குண்டு துளைக்காத கார் வேண்டாம் என கூறியிருந்தார். இருப்பினும் அவரது கோரிக்கை குறித்து தமிழக அரசின் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்றார்.
இதையடுத்து இன்னும் 2 நாட்களுக்குள் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிபதி சுகுணா உத்தரவிட்டார். நாளை மறு நாளைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications