டெல்லியில் உலக கழிப்பறை மாநாடு
டெல்லி: உலக அளவில் நிலவும் கழிப்பறை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக டெல்லியில் 40 நாடுகள் பங்கேற்கும் உலக கழிப்பறை மாநாடு தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் ஒரு காட்சியை தவறாமல் காண முடியும். அதிலும் அதிகாலையிலும், மாலை நேரங்களிலும் பயணம் செய்வோரின் கண்களுக்கு இந்தக் காட்சி தப்பவே தப்பாது.
அது - ரயில்வே டிராக்கின் ஓரங்களில் உள்ள செடிகளுக்கு இடையே புதைந்து காணப்படும் மனிதர்கள்தான். அவர்கள் தங்களது இயற்கை உபாதையை போக்க இப்படிப் புதர்களை நாடுவது சகஜமான காட்சியாகி விட்டது.
ரயில் வரும்போது எழுந்து நின்று கொள்வதும், ரயில் ேபான பின்னர் அமர்ந்து 'பாரத்தை' இறக்குவதும் சகஜமான காட்சியாகும்.
இந்தியக் கிராமங்களில் மலம் கழிக்க மக்கள் அதிகம் நாடுவது வயல் வெளிகளையும், ரயில்வே பாதைகளையும்தான். திறந்தவெளியில்தான் அவர்கள் தங்களது 'பாரத்தை' இறக்கி வைத்து விட்டுச் செல்கிறார்கள்.
இதில் பெண்களின் நிலைதான் ரொம்ப சோகமானது. இருள் பிரியாத அதிகாலை நேரங்களிலும், இருள் கவியும் மாலை நேரங்களிலும்தான் அவர்கள் இப்படி போக முடியும். இதனால் அவர்களுக்கு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வேறு சில பக்கவிளைவுப் பிரச்சினைகளுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இது இந்தியாவில் மட்டும் இல்லை. உலகம் முழுவதும் இந்த கழிப்பறைப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன. இதுகுறித்து யோசித்த ஐ.நா. சபை, 2025ம் ஆண்டுக்குள் இதற்கு நிரந்தரத் தீர்வு காண தீர்மானித்தது.
வளரும் நாடுகளில் நவீன டாய்லெட் வசதிகளை ஏற்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளன. செலவுகள் அதில் முக்கியமான ஒன்று. ஆனால் அதற்கு மாற்று வழி உள்ளது.
அதுகுறித்து விவாதிக்கத்தான் டெல்லியில் உலக கழிப்பறை மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. 4 நாள் நடக்கும் இந்த மாநாட்டில், 40க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு கழிப்பறைப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு என்ன, செலவுகளைக் குறைக்க மாற்று வழி என்ன என்பது குறித்து விவாதிக்கின்றனர்.
ஐ.நா. மதிப்பீட்டின்படி, உலகம் முழுவதும் 20.6 கோடி மக்கள் முறையான, சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எண்ணிக்கையை 2015ம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க ஐ.நா. திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் 70 லட்சம் பேர் முறையான கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் பிரதிநிதியான பிந்தேஸ்வர் பதக் கூறுகையில், மற்ற பிரச்சினைகளைப் போல இதுவும் ஒரு முக்கியமான பிரச்சினை.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் அடிப்படை சுகாதார வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன. இதுகுறித்துத்தான் இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப் போகிறோம் என்றார்.
இந்தியாவில் சுலப் இன்டர்நேஷனல் நிறுவனம் குறைந்த செலவிலான கழிப்பறைகளை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் துணைத் தலைவரான அனிதா ஜா கூறுகையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் கழிப்பறை முறைதான் மிகவும் சிறந்தது, செலவு குறைந்தது. இந்த வகை கழிப்பறைகளை உருவாக்க குறைந்தது 700 ரூபாயிலிருந்து, அதிகபட்சம் 3000 ரூபாய் வரை செலவாகும்.
இதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவையில்லை என்பது முக்கியமான அம்சமாகும். தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகளில் இத்தகைய கழிப்பறைகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் தண்ணீரையும் கூட நாம் சேமிக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications