கோர்ட் உத்தரவை ஏற்க மறுத்தவர் ஜெ.தான் - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhiசென்னை: உரிமை பிரச்சனை குறித்து இதற்கு முன்னர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து தீர்மானம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்று முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேள்வி: சட்டமன்ற நடவடிக்கை குறித்தோ, நாடாளுமன்ற நடவடிக்கை குறித்தோ நீதிமன்றங்கள் தலையிடலாமா என்பதும், அது போலவே நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்படலாமா என்பதும் பொதுவாக பல வருட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்து வருகிறது.

தன் மீது சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட உரிமைப்பிரச்சனை குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா, சட்டமன்றத்தால் அமைக்கப்பட்ட உரிமைக்குழுவிற்கு விளக்கம் தராமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது கூட சட்டமன்ற உரிமையை மீறுகின்ற செயல் என்றே கூறப்படுகிறதே

பதில்: இந்தக் கேள்வி முக்கியமாக அனைவரும் சிந்திக்கத்தக்க ஒன்றாகும். எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா இதை நீதிமன்றத்திலே கொண்டு சென்று அங்கே இடைக்காலத் தடையும் பெற்றுள்ள நிலையில் நீதிமன்றம் அனுப்புகின்ற நோட்டீஸை பேரவைத் தலைவர் பெற்றுக் கொள்வாரா என்பது அவருக்குள்ள அதிகாரத்தைப் பொறுத்து அவர் முடிவெடுக்க வேண்டிய ஒன்றாக அமைகிறது.

இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது எதற்காக உரிமைப் பிரச்சனை கொண்டு வரப்பட்டது. அது தற்போது என்ன நிலையிலே உள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறு உரிமைப் பிரச்சனை கொண்டு வரப்பட்டதுண்டா, அப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு அப்போது கொண்டு செல்லப்பட்டதா என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளித்தாலோ, நாட்டு மக்களுக்கும் மற்றவர்களுக்கும் உண்மை புரியுமென்று நம்புகிறேன்.

Jayalalithaகடந்த மாதம் 17 ம் தேதி அன்று ஜெயலலிதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அவர்களுடைய அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர் இதழில் வெளிவந்தது வருமாறு ,

சில தினங்களுக்கு முன்னர் கருணாநிதி அவரது மகன், அவரது வாரிசு ஸ்டாலினுக்கு அறிவுரை கூறியதாக எனக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது கருணாநிதி சொன்னாராம். தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரும்போது நான் இருப்பேனோ இல்லையோ, ஆகவே நீ (ஸ்டாலின்) எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். இப்போது மற்ற கட்சிகளோடு இருக்கின்ற கூட்டணியை அப்படியே பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இதில் கவனக் குறைவாக இருந்தால் நாளை ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் நீ பெரும் துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்க வேண்டி வரும் என்று சொன்னாராம். அதற்கு ஸ்டாலினுடைய பதில் என்ன தெரியுமா. அடுத்த தேர்தல் வரும்போது அவர் உயிரோடு இருந்தால் தானே என்று சொன்னாராம்.

இவ்வாறு ஜெயலலிதா கூறி, அவர்களது ஏட்டிலும், வேறு சில ஏடுகளிலும் இந்த செய்தி வந்த பின்னர் கடந்த மாதம் 18 ம் தேதி அன்று ஜெயலலிதாவின் இந்த பதிலால் பாதிக்கப்பட்டதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மீது ஒரு உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வந்தார். அந்த உரிமைப் பிரச்சனையைக் கூட பேரவைத் தலைவரின் அனுமதியின்றி கொண்டு வந்ததாக ஜெயலலிதா தரப்பினர் தற்போது கூறியிருக்கிறார்கள்.

பேரவைத் தலைவரின் அனுமதியின்றி உரிமைப் பிரச்சனை கொண்டு வரப்படவில்லை. கடந்த 18 ம் தேதியன்று முறைப்படி மு.க.ஸ்டாலின் பேரவைத் தலைவரிடம் உரிமைப் பிரச்சனையைக் கொண்டு வருவதற்கான அனுமதியை கேட்டு கடிதம் கொடுத்து, அந்தக் கடித நகலில் பேரவைத் தலைவர், பேரவைச் செயலாளர் ஆகியோரின் கையொப்பத்தை பெற்றுள்ளார்.

18 ம் தேதியன்று அவை நடவடிக்கை குறிப்பின் முதல் பத்தியை பார்த்தால், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்கள் ஒரு உரிமைப் பிரச்சனை குறித்து அறிவிப்பு ஒன்றினைக் கொடுத்துள்ளார்.

இந்த பிரச்சனை குறித்து சுருக்கமாக சொல்லும்படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று பேரவைத் தலைவர் கூறியிருப்பதைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். எனவே பேரவைத் தலைவரின் அனுமதியின்றி உரிமைப் பிரச்சனை கொண்டு வரப்படவில்லை.

மேலும் ஸ்டாலின் அன்றைய தினம் சட்ட பேரவையில் இந்தத் தகவலைக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன செய்தி எந்தளவிற்கு உண்மை என்பதை அவர் நிரூபிக்க முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் யாரும் நிரூபிக்க முன் வரவில்லை.

ஆனால் இதற்கு மாறாக ஜெயலலிதா வெளியிலே செய்தியாளர்களிடம் பேசியதற்கு சட்டப் பேரவையில் எப்படி உரிமைப் பிரச்சனை கொண்டு வரலாம் என்று ஒரு கேள்வியை எழுப்பினார். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கடந்த 19ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் படித்த அறிக்கையில்,

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அவையிலே உறுப்பினராகவே இல்லாத முரசொலி செல்வம் அவைக்கு வெளியிலே ஒரு ஏட்டிலே ஏதோ எழுதினார் என்பதற்காக உரிமைப் பிரச்சனை எழுப்பப்பட்டு, வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பேரவையில் கூண்டிலே ஏற்றி தண்டிக்கப்பட்ட நிகழ்ச்சியையும், அதே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நான் அவைக்கு வெளியிலே அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து முரசொலியிலே கொண்டு வரப்பட்டு, உரிமைக்குழுவிற்கு எந்தெந்த தேதிகளில் அனுப்பப்பட்டன என்ற விவரங்களையும் ஸ்டாலின் தொகுத்துக் கூறினார். அதற்கும் ஜெயலலிதாவிடமிருந்தோ, எதிர்தரப்பினரிடமிருந்தோ எந்த விதமான பதிலும், மறுப்பும் இதுவரை கிடையாது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இவ்வாறு என் மீது உரிமைப் பிரச்சனை கொண்டு வரப்பட்டு அதற்கு விளக்கம் கோரி உரிமைக் குழுவிடமிருந்து எனக்கு கடிதம் வந்தபோது, முறைப்படி நான் அதற்கு விபரமாக பதிலை எழுதி உரிமைக் குழுவிற்கு அனுப்பினேனே தவிர சட்டமன்றம் சம்பந்தப்பட்ட அந்த பிரச்சனையை அப்போது நான் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லவில்லை.

ஆனால் தற்போது சட்டமன்ற உரிமைக் குழுவிடமிருந்து கடந்த 20ம் தேதியன்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கு உரிமை பிரச்சனை மீதான விளக்கத்தை தருமாறு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு ஜெயலலிதா பதில் அளிக்காமல், நேரடியாக நீதிமன்றம் சென்றுள்ளார்.

இந்த வழக்கில் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா இடைக்கால தடை விதித்ததுடன், விளக்கும் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

கேள்வி: நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பினால் சட்டமன்றப் பேரவைத் தலைவர் அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமல்லவா

பதில்: இதற்கும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முன் மாதிரி உண்டு. கடந்த 04-05-1992 அன்று ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பேரவையில் அவை முனைவர் நாவலர் நெடுஞ்செழியனால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அந்த தீர்மானம் பின்வருமாறு,

இந்திய அரசியலைப்பு சட்டம் 194ன் படி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, மற்றப் பேரவைகளைப் போலவே தனித்தன்மை வாய்ந்த பொறுப்புகள், கடமைகள் மற்றும் உரிமைகள் ஆகியவற்றை பெற்றிருக்கிறது. பேரவையின் உரிமைகளையும், உறுப்பினர்களின் உரிமைகளையும் எல்லா வகையிலும் காக்க வேண்டிய முழுப் பொறுப்பும், கடமையும் இந்தப் பேரவைக்கு இருக்கிறது. இவற்றைப் பொறுத்தவரை பேரவையின் உரிமைகளும், நடவடிக்கைகளும் நீதிமன்றங்கள் மற்றைய அமைப்புகள் தனி மனிதர் ஆகியோரின் தலையீட்டுக்கு அப்பாற்பட்டவையாகும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகிய மூன்றும் தனித்தனி பொறுப்புகளுடன், தனித்தனியே இயங்கும் தன்மை கொண்டவையாகும். நாடளுமன்ற சட்டமன்றத்துறையும், நீதித்துறையும் ஒன்றையொன்று மதித்து நடக்க வேண்டியவை ஆகும். ஒன்றையொன்று தழுவி நின்று ஆதரித்து பணியாற்ற வேண்டியவை. ஒன்றின் அதிகார வரம்பில் மற்றொன்று தலையிடுவதற்கு வழியில்லை.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 212வது பிரிவு, பேரவை, தனது அதிகார வரம்புக்குட்பட்டு எடுக்கும் எந்தவித நடவடிக்கைகளையும் நீதிமன்றங்கள் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற காரணத்திற்காக விசாரிக்கக்கூடாது என்று தெளிவுபடுத்துகின்றது.

கடந்த 27-04-1992 அன்று அதிமுக ஆட்சியில் உச்சநீதிமன்றம், பேரவைச் செயலாளரை பிரதிவாதியாகச் சேர்த்து நோட்டீஸ் அனுப்பியதாக உள்ள பிரச்சனை செய்தித் தாள்களில் வந்தபோது பேரவைத் தலைவர், இப்பேரவை இடும் கட்டளை மற்றும் தெரிவிக்கும் அறிவுரை ஆகியவை தவிர, வேறு எதையும் பேரவைச் செயலாளர் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று தீர்ப்பளித்துள்ளார் என்று இந்தப் பேரவை நினைவு கூர்கிறது.

அவை உரிமை மீறல் பிரச்சனைக்காக உச்ச நீதிமன்றத்தில் உள்ள இப்பேரவை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் பேரவையின் எந்த உறுப்பினரே, பேரவை செயலாளரோ, பேரவை செயலக ஏனைய அதிகாரிகளோ எந்தவித நோட்டீஸ்களையும், அழைப்பு ஆணைகளையும், பிற ஆணைகளையும் அறிவுறுத்தல்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்று இப்பேரவை தீர்மானிக்கிறது.

இவ்வாறு அவரது ஆட்சியின்போது தீர்மானம் நிறைவேற்றி ஜெயலலிதா தான், தற்போது தன்மீது உரிமைப் பிரச்சனை என்றதும், இங்கே தெரிவித்த அத்தனை விதிமுறைகளையும் மீறி இவரை நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்திருக்கிறார் என்று முதல்வர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+