இந்திய வீரர்களுக்கு தாட்சர் அஞ்சலி!
லண்டன்: முதல் மற்றும் 2ம் உலகப் போர்களின்போது இங்கிலாந்துக்காக போரிட்டு உயிர் நீத்த பிரிட்டிஷ் இந்திய போர் வீரர்களின் நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மார்க்கரெட் தாட்சர் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
2002ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியப் போர் வீரர்களுக்கான நினைவிடத்தை ராணி எலிசபெத் தொடங்கி வைத்தார். இந்தியாவைப் பூர்விமாகக் கொண்ட கரண் பில்மோரியா, பரோனஸ் ஷ்ரலா பிளேத்தர் ஆகியோரின் முயற்சியால் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஹைட் பார்க் பகுதியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் ஹில் பகுதியில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் தாட்சர் இன்று அஞ்சலி செலுத்துகிறார். முதல் உலகப் போரின்போது, இங்கிலாந்தின் ஆக்கிரமிப்பில் இருந் இந்தியாவிலிருந்து 10.5 லட்சம் வீரர்கள் இங்கிலாந்துக்காக போரில் ஈடுபட்டனர்.
இவர்களில் 1 லட்சத்து 40 ஆயிரம் வீரர்கள் பிரான்ஸிலும், பெல்ஜியத்திலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 90 ஆயிரம் பேர் இந்தியாவிலும், 50 ஆயிரம் பேர் பிற துணைப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
போர் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் பிரான்ஸில் உள்ள மேற்குப் பிராந்தியத்தில் இந்திய வீரர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். முதலாவது யூப்ரஸ் கலகத்தில் பங்கேற்ற இந்தியரான குதாதத் கான், இங்கிலாந்து ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான விக்டோரியா கிராஸ் மெடலை வென்றார் என்பது நினைவிருக்கலாம். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் இவர்தான்.
இந்தியாவைச் சேர்ந்த 13 ஆயிரம் வீரர்களுக்கு ராணுவ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் 13 பேருக்கு விக்டோரியா கிராஸ் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
போரின் இறுதியில், 47 ஆயிரத்து 746 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர் அல்லது காணவில்லை என அறிவிக்கப்பட்டது. 65 ஆயிரத்து 126 பேர் காயமடைந்தனர்.
நேபாளத்தைச் சேர்ந்த 1 லட்சம் கூர்க்காக்களும் முதலாவது உலகப் போரின்போது ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் இருவருக்கு விக்டோரியா கிராஸ் வழங்கப்பட்டது.
2வது உலகப் போரின்போது, இந்தியாவிலிருந்து பெருமளவிலான வீரர்கள் போரில் பங்கேற்றனர். கூட்டுப் படையில், 2.5 லட்சம் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் கலந்து கொண்டனர்.
இவர்களில் 70 ஆயிரம் பேர் இந்திய ராணுவத்தில் இடம்பெற்று பர்மாவில் பணியாற்றினர். ஜெர்மானியர்களுக்கு எதிரான வட ஆப்பிரிக்க சண்டையின்போதும், இத்தாலிக்கு எதிராக எரித்ரியா, அபிசீனியாவிலும், மத்திய கிழக்கு, ஈரான், ஈராக்கிலும், இத்தாலியல் நடந்த புகழ் பெற்ற மாண்டி காசினோ சண்டையிலும் இந்திய வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பிரிட்டிஷ் இந்திய கடற்படையிலும் இந்தியப் பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர். இவர்கள் நர்ஸ்களாகவும், பிற பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
2வது உலகப் போரின்போது 36 ஆயிரத்து 92 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் அல்லது காணாமல் போயினர். 64 ஆயிரத்து 354 பேர் காயமடைந்தனர். 80 ஆயிரம் பேர் சிறைக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். 30 இந்திய வீரர்களுக்கு விக்டோரியா கிராஸ் வழங்கப்பட்டது.
நேபாளத்தைச் ேசர்ந்த 1 லட்சத்து 12 ஆயிரம் கூர்காக்கக்களும் 2ம் உலகப் போரின்போது ஈடுபடுத்தப்பட்டனர்.
பிரிட்டிஷ் இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் கரீபிய நாடுகளைச் ேசர்ந்த, இங்கிலாந்துக்காக போராடிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நினைவிடம் கடந்த 2002ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்குதான் இன்று தாட்சர் அஞ்சலி செலுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications