தடையை மீறி தமிழச்செல்வன் இரங்கல் ஊர்வலம் - நெடுமாறன்
சென்னை: சென்னையில் நாளை நடத்தத் திட்டமிட்டுள்ள தமிழ்ச்செல்வன் இரங்கல் ஊர்வலத்திற்கு போலீசார் தடை விதித்திருந்தாலும், தடையை மீறி ஊர்வலம் நடக்கும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் ஊர்வலத்திற்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் தடை விதித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இது தமிழக அரசின் மனித நேயமற்ற போக்கினையும், தமிழர் விரோத போக்கினையும் எடுத்துக்காட்டுகிறது.
தமிழ்ச்செல்வனுக்காக இரங்கல் ஊர்வலம் நடத்துவது சட்டப்படி ஏற்புடையதாக இல்லை என்று போலீஸ் கமிஷ்னர் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால், தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதையும் சட்டப்படி ஏற்புடையது அல்ல என்று கமிஷ்னர் கருதுகிறாரா?
தமிழர் ஒருவருக்கு இரங்கல் தெரிவிப்பதே சட்ட விரோதம் என்று காங்கிரஸ்காரர்கள் தெரிவித்த எதிர்ப்புக்கு பணிந்து தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தமிழருக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் நடவடிக்கை ஆகும்.
தமிழ்ச்செல்வன் இரங்கல் ஊர்வலம், திட்டமிட்டப்படி நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் மன்றோ சிலை முன்பிருந்து புறப்படும். அனைத்து கட்சி தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் திரண்டு வந்து தடையைத் தகர்த்து தமிழர் மானத்தை காக்க முன் வருக என அழைக்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications