வீட்டுக்காவலில் இருந்த பெனாசிர் விடுதலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ திடீரென்று இன்று காலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த 3ம் தேதி நெருக்கடி நிலையை அதிபர் முஷாரப் அமல்படுத்தினார். இதனையடுத்து பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனாசிர், இம்ரான்கான் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து முஷாரப்புக்கு அதிக நெருக்கடி வந்ததால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பெனாசிர் விடுவிக்கப்பட்டார்.
அதன்பின் கடந்த 13ம் தேதி பெனாசிர், பாகிஸ்தானில் முஷாரப் அமல்படுத்தியுள்ள அவசரநிலையை ரத்து செய்யக்கோரியும், ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்யக் கோரியும் தடையை மீறி பேரணி நடத்தினார்.
தடையை மீறி நடத்தப்பட்ட இந்த பேரணி புறப்படுவதற்கு முன்பாகவே பெனாசிரை போலீசார் கைது செய்து லாகூரில் ஒரு வாரம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
இதனையடுத்து பெனாசிரை விடுதலை செய்யவும், நாட்டில் அமல்படுத்தியுள்ள அசரநிலையை ரத்துசெய்யக் கோரியும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் தொடர்ந்து முஷாரப்பை வற்புறுத்தினார்.
அமெரிக்காவின் உயரதிகாரி ஜான் நெக்ராபான்டீ, பாகிஸ்தானில் உள்ள அவசரநிலை குறித்து அதிபர் முஷாரப்பை சந்திக்க இன்று பாகிஸ்தான் வருவதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திடீரென்று வீட்டுக் காவலில் இருந்த பெனாசிர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டதாக போலீஸ் உயரதிகாரி அப்தப் சீமா தெரிவித்தார்.
வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும், பாதுகாப்பு கருதி அவரை சந்திக்க பத்திரிக்கையாளர்கள் உட்பட எந்த அரசியல் தலைவரையும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் அதிபர் முஷாரப் ராணுவ தளபதி பதவியிலிருந்து டிசம்பர் 1ம் தேதி விலகுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
