கோவை விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்: திருநாவுக்கரசர் கோரிக்கை
டெல்லி: மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும். அதேபோல கோவை விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரையும், திருச்சி விமான நிலையத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பாஜக எம்.பி. திருநாவுக்கரசர் கோரியுள்ளார்.
ராஜ்யசபாவில் அவர் பேசுகையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சுதந்திரப் போராட்ட வீரராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் திகழ்ந்தவர்.
தேசியம், விடுதலை, தேச ஒற்றுமைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தலைவர்களில் ஒருவர். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் சுமார் 9 ஆண்டுகள் சிறையில் வாடியவர்.
குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி வென்றவர். போட்டியிட்ட 5 முறை சட்டசபைக்கும், 3 முறை நாடாளுமன்றத்திற்கும் வென்றவர். அவருடைய வரலாறு தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்கப்பட்டுள்ளது.
1980ல் எம்.ஜி.ஆர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரது முழு உருவப்படம் சட்டசபையில் வைக்கப்பட்டது. அவரது முழு உருவச்சிலை நாடாளுமன்றத்தில் உள்ளது.
சென்னை விமான நிலையங்களுக்கு அண்ணா, காமராஜர் ஆகியோரது பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. அதுபோல மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கனார் விமான நிலையம் என்று பெயர் வைத்து ஆணையிடுமாறு மத்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து தமிழக முதல்வர் கருணாநிதி ஏற்கனவே மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
அதே போல் அறிமுகம் தேவையில்லாத தலைவரான முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பெயரை கோவை விமான நிலையத்திற்கும், அம்பேத்கர் பெயரை திருச்சி விமான நிலையத்திற்கும் சூட்டுமாறு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்றார்












Click it and Unblock the Notifications