ரேஷன் கடைகளிலும் செல்போன், சிம் கார்டு வாங்கலாம் !
காஞ்சிபுரம்: இனி ரேஷன் கடைகளிலும் மொபைல் போன் விற்பனை செய்யும் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் செல் போன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கட்டுப்பாட்டில் 164 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் சென்னையை ஒட்டிய பகுதிகளில் உள்ள 80 ரேஷன் கடைகளில் செல் போன் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நந்தம்பாக்கம் காவல் நிலையம் அருகே உள்ள ரேஷன் கடையில் செல் போன் விற்பனை தொடங்கியுள்ளது. மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சிறப்பு அதிகாரி சந்திரசேகர் இந்த விற்பனையை தொடங்கி வைத்தார்.
இது குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், செல் போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி , இன்றைக்கு சிறுதொழில் புரியும் ஏழை மக்கள், விவசாயிகள் கூட செல் போன் பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும் பொதுமக்களுக்கு இவை நியாயமான விலையில் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியான விஷயம். அரிசி , சர்க்கரை , மண்ணெண்ணையை போன்றே ரேஷன் கடைகள் மூலம் செல் போன்களையும் விற்பனை செய்ய திட்டமிட்டு, அதற்கான பணியில் முழுவீச்சில் இறங்கியுள்ளோம்.
கடைக்காரர்கள் செல் போன்களை விற்கும் போது லாபம் வைத்து விற்பார்கள். அரசாங்கம் விற்பனை செய்யும் போது அந்த லாபம் மக்களை சென்றடைகிறது.
மார்க்கெட் விலையை காட்டிலும் ரேஷன் கடைகளில் செல் போன் விலை குறைவாகவும், தரமாகவும் கிடைக்கும் என்றனர்.
ரேஷன் கார்டு தேவையில்லை:
நந்தம்பாக்கம் கூட்டுறவு ரேஷன் கடையில் முதல் நாளன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொபைல்போன் விற்பனை மட்டும் துவங்கப்பட்டது.
சில நாட்களில் நோக்கியா, மோட்டோரோலா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் போன்களும் விற்பனை செய்யப்பட உள்ளன. பல்வேறு நிறுவனங்களின் சிம்கார்டு , ரீசார்ஜ் கார்டு , டாப்அப் கார்டு போன்றவையும் இங்கு விற்பனைக்கு வர உள்ளன.
முதற்கட்டமாக ஏர்செல், ரிலையன்ஸ் நிறுவனங்களின் கார்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், வோடாபோன் ஆகிய நிறுவனங்களின் கார்டுகளை விற்பனை செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் உள்ளிட்டவற்றை வாங்க ரேஷன் கார்டுகள் தேவையில்லை.












Click it and Unblock the Notifications