ஐயப்பன் கோவில் அரவணை தட்டுப்பாடு தீர்க்கப்படும்: அச்சுதானந்தன்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அரவணை பிரசாத தட்டுப்பாடு இந்த வாரத்திற்குள் சரி செய்யப்பட்டு விடும் என்று கேரள முதல்வர் அச்சதானந்தன் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள அய்யப்பன் கோவிலின் முக்கியமான விழாவான மண்டல பூஜை கடந்த மாதம் 17ம் தேதி துவங்கியது. மண்டல பூஜை துவக்க நாளிலிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் கோவிலின் முக்கியமான பிரசாதமான அரவணை பாயாசம் பக்தர்களுக்கு விநியோகிப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் கேட்டதற்கு, புதிதாக ஒப்பந்தம் எடுத்தவர்களால் ஓரிரு நாள்கள் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்யும் என்றனர்.
ஆனால் மண்டல பூஜை முடிய இன்னும் 10 நாட்கள் தான் உள்ளன. ஆனால் இன்று வரை அரவணை பிரசாதம் தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதில் ரூ. 40க்கு விற்கப்படும் அரவணை டின், தேவஸ்தான ஊழியர்கள் சிலரின் உடந்தையுடன் கள்ளத்தனமாக டின் ஒன்று ரூ. 180க்கு விற்கப்படுகிறது.
இதனால் பக்தர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு குவிந்தது.
இதுகுறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியதாவது,
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அரவணை பிரசாதம் கொடுக்க தினந்தோறும் 1.50 லட்சம் டின்கள் தேவை. ஆனால் ஒப்பந்தம் எடுத்துள்ளவர்களிடம் 1.25 டின்கள் தான் இருந்துள்ளன. இதனால் தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை 1 வாரத்திற்குள் சரி செய்யப்பட்டுவிடும்.
அரவணை விவகாரம் குறித்து 3 பேர் கொண்ட திருவாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள். பக்தர்களுக்காக சிறிய ஆபரேசன் தியேட்டருடன் கூடிய மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு அதிக வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார்.
மண்டல பூஜை முடிய இன்னும் 10 தினங்கள் தான் இருக்கிறது. இந்நிலையில் அச்சுதானந்தன் அரவணை பிரச்சனையை இந்த வாரத்திற்குள் சரிசெய்து விடுவோம் என்று சொல்லியுள்ளது வேடிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications