தமிழர் விரோத பாஜக-சு.சுவாமி: திமுக மாநாட்டில் கண்டன தீர்மானம்
திருநெல்வேலி: தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்துவதற்கு உரிய வழிவகையை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் சேது சமுத்திர திட்டத்தை முடக்கி தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் தடை போட முயலும் பாஜக, இந்து முன்னணி, சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்ட தமிழர் விரோத-மதவாத சக்திகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நெல்லை மாநாட்டில் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் தீர்மானங்களை வாசிக்க அதை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் முன்மொழிந்து, வழிமொழிந்தனர்.
அந்த தீர்மானங்களின் விவரம் வருமாறு,
உயர்நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்பு:
தமிழக முதல்வர் தமிழ் உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக பயன்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நிலையில், மற்ற மாநில ஆட்சி மொழிகளை புறக்கணித்துவிட்டு இந்தி மொழியை மட்டுமே உயர்நீதிமன்ற மொழியாக ஏற்பது இந்தியாவில் உள்ள பிற மொழி பேசும் மக்களுக்கு தீங்கு இழைப்பதாகும்.
கல்வி அறிவற்ற கோடிக்கணக்கான பாமர மக்களும் நீதி கோரி உயர்நீதிமன்றங்களை அணுகும் நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும், அந்தந்த மாநில நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
சேது சமுத்திர திட்டம்:
சேது சமுத்திர திட்டத்தை அரசியல் உள்நோக்குடன் தடுத்து நிறுத்திட சில மதவாத சக்திகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பிற்கும், தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புகளும் தடை செய்ய முயலும் பாஜக, இந்து முன்னணி, சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்ட தமிழர் விரோத மதவாத சக்திகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றிட மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம்:
தென் மாவட்டங்களில் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை பெருக்கவும், நாங்குநேரி உயர் தொழில்நுட்ப வளாக திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.
மலேசியத் தமிழர்கள்:
மலேசியத் தமிழர்கள் மற்ற இனத்தாருடன் சக உரிமையுடன் சுமூகமாக வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.
இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம், ஆதிதிராவிடர்களுக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம் என்று அரசுப் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்பட்ட கால கட்டத்தில், இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனவே 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் தனிமசோதா ஒன்றை தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசு நிறைவேற்றியது. குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்ட சட்டம் நடைமுறைக்கு வராமல் உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
மாநிலங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் தேவைக்கேற்ப இட ஒதுக்கீட்டின் அளவை நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கிடும் வகையில் மத்திய அரசு அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்துவதற்கு உரிய வழிவகையை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
சிறுபான்மையினருக்கு:
சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்ட முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் 2007ம் ஆண்டில் இருந்து இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீதமும், கிறிஸ்துவர்களுக்கு 3.5 சதவீதமும் இட ஒதுக்கீடு அளித்து சமூக நீதியை வழங்கி உள்ளார். இதற்கு மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய அரசால் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக நியமிக்கப்பட்ட சச்சார் குழுவின் பரிந்துரைகளை ஏற்று சிறுபான்மையினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர் அனுமதிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இந்த மாநாடு இதயமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
அதே நேரத்தில் அனைத்து இந்திய நுழைவுத் தேர்வுகளின் மூலமாக மாணவ-மாணவியரை தேர்வு செய்யும்போது இட ஒதுக்கீடு ஏதும் இதுவரை செய்யப்படவில்லை. எனவே இவ்வகை அனுமதிகளிலும் 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும்.
மத்திய அரசின் துறைகளிலும் இட ஒதுக்கீடு:
மண்டல் கமிஷன் பரிந்துரைகளையொட்டி மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வழி வகுக்கப்பட்டது. மத்திய அரசின் நிறுவனங்களில் வேலை நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதில் எந்தவித பின்னடைவும் ஏற்பட்டு விடாமல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கண்காணிக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தனியே நாடாளுமன்ற குழு ஒன்றை அமைத்திட வேண்டும்.
கம்ப்யூட்டர் பயிற்சி:
அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளில் படித்த இளைஞர்கள் வெற்றி பெற உதவிடும் வகையில் கம்ப்யூட்டர் பயிற்சி, நேர்முகத் தேர்வு பயிற்சி, பொது அறிவு, கணிதம், ஆங்கில பயிற்சி ஆகியவற்றை அளிக்கக்கூடிய வகையில் மாவட்டங்கள் தோறும் திமுக இளைஞர் அணி சார்பில் பயிற்சி நிலையங்களை உருவாக்கி திறன் மிக்க கல்வியாளர்களையும், பயிற்சியாளர்களையும், நியமித்து படித்து விட்டு வேலைக்கு செல்ல விரும்பும் இளைஞர்களுக்கு உதவுவது என்று இளைஞர் அணி மாநில மாநாடு தீர்மானிக்கிறது.
1 லட்சம் இளைஞர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி:
தற்போது உள்ள ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை ஆய்வு செய்து நல்ல முறையில் இயங்கும் பள்ளிகளை தேர்வு செய்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். மேலும் ஓட்டுனர் பயிற்சிக்கான புதிய மையங்களை நிறுவி, வேலை வாய்ப்பற்ற 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பயிற்சி அளித்திட வழிவகை செய்ய வேண்டும்.
சீருடைப் பணிக்கு பயிற்சி:
இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் மூலமாக ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு மாவட்டத்திற்கு 100 நபர்கள் வீதம் ஆண்டு 1க்கு மாநிலம் முழுவதும் சுமார் 1,200 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும், இதற்கென தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை, ராணுவத்தினரை பயிற்றுனர்களாக பயன்படுத்தவும் தமிழக அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.
திறனாக்கப் பயிற்சி:
தமிழகத்தில் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்கள், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறை போன்ற துறைகளில் தனித்தனியாக நடைபெறுகின்றன.
இதற்குப் பதிலாக அனைத்துத் துறைகளிலும் பயிற்சிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள நிதியை ஒருங்கிணைத்து பெரியளவில் திறனாக்கப் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
கல்விக்கடன்:
தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பெரும்பாலும் இருப்பதால் கல்விக் கட்டணங்களை செலுத்துவதில் சிரமப்படுகிறார்கள். இது போன்ற மாணவர்களுக்கு கல்விக்கடன் சிரமம் இல்லாமல் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.
கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கின்ற வகையில், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்தில் குறைந்த பட்சம் 100 கிமீ தொலைவில் படிக்கின்ற நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாடகைப் படியாக ரூ.500 வழங்கலாம் எனவும், இந்த திட்டத்தில் பயன்பெற மாணவருடைய கல்வி சாதனைகளை கருத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
நுழைவுத் தேர்வு:
மத்திய அரசு நுழைவுத் தேர்வை மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தவும், மாநில கல்வி நிலையங்களில் பயின்ற மாணவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தமிழகத்தில் கனிம வளங்கள் அதிகமாக உள்ளன என்பதை கனிமவள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் மணிக்கறகள் எனப்படும் பச்சைக்கற்கள், மதுரை கொட்டாம்பட்டி, சிவகங்கை உள்பட பல மாவட்டங்களில் உள்ள கனிமங்களை பயன்படுத்தத் தக்க வகையில் நன்கு ஆராய்ந்து தொழில் வளங்களை பெருக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
கால்நடைக் கல்லூரி:
நெல்லையில் கால்நடைக்கல்லூரி இல்லாத குறை உள்ளு. எனவே இந்த குறையை போக்கிட முழுமையாக கல்வியில் தன்னிறைவு பெறும் வகையில் நெல்லையில் கால்நடைக் கல்லூரி ஒன்றை அமைத்திட முதல்வர் கருணாநிதியை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
திறன் வளர்க்கும் போட்டி:
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. வருங்கால இளைஞர்கள் இவர்களின் படைப்புகளையும், கருத்துக்களையும் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி ஆகியவை ஜூன், செப்டம்பர் மாதங்களில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை இளைஞர் அணி அளிக்கும்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கள் மேல்படிப்பை தொடர முடியாவிட்டால், அவர்களுக்கு கல்விக்கட்டணங்கள் இளைஞர் அணி சார்பில் வழங்கப்படும். இந்த திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு திமுக இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications