விடாமல் கன மழை: சென்னை வெள்ளக்காடானது

சென்னை: சென்னை நகரில் நேற்று இரவு முதல் நிற்காமல் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நகரமே வெள்ளக்காடாகியுள்ளது. போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலின் தென் மேற்கில், தென் கிழக்குப் பகுதிக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையும் நிற்காமல் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
கன மழையுடன், சூறைக் காற்றும் வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
நகரின் அனைத்துப் பகுதிகளிலும் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வட சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடுகிறது.
அம்பத்தூர், கொரட்டூர், வில்லிவாக்கம், கொளத்தூர், எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளும், வேளச்சேரி, மடிப்பாக்கம், விஜயநகரம், ராம் நகர், சேலையூர், கீழ்க்கட்டளை ஆகிய தென் சென்னை பகுதிகளிலும் மழை பாதிப்பு அதிகம் உள்ளது.
இந்தப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பல குடிசை வீடுகள் நீரில் மிதக்கின்றன. நூற்றுக்கணக்கான பேர் தண்ணீர் சுற்றி வளைத்திருப்பதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதேபோல போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கிக் கிடப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அவஸ்தைக்குள்ளாகியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை நகரில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது. மழை மேலும் 48 மணி நேரத்திற்கு நீடிக்கும் எனவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து தமிழகத்தை நோக்கி மேலும் நகர்ந்து வந்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல கடலோர தமிழகத்திலும் கன மழை பெய்துள்ளது. திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அங்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.
கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குப் போக வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் நேற்று பெய்த கனமழை மற்றும் வீசிய சூறைக் காற்றால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகினர். பலத்த காற்று காரணமாக உச்சிப்புளி அருகே தண்டவளாத்தில் மரம் விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேது எக்ஸ்பிரஸ் ரயில் நீண்ட தாமதத்திற்குப் பின்னர் சென்றது.
ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் கடல் பகுதிகளில் தொடர்ந்து கொந்தளிப்பு நிலவி வருகிறது.
நாகையில் பள்ளிகள் மூடல்:
காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் நாகை மாவட்டத்தில் நேற்றிரவு 9.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை நிற்காமல் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. இந்த தொடர் மழையால் அப்பகுதிகளில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
நாகை கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக அக்கரை பேட்டை வேளாங்கண்ணி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை, புஷ்பவனம் ஆகிய கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கடலில் அலைகள் பல அடி உயரம் வரை எழுகிறது. இதனால் மீன்பிடி படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திருவாரூரில் கன மழை:
திருவாரூரிலும் மழை விடிய விடிய பெய்து வருவதால் மாவட்ட கலெக்டர் சந்திரசேகரன் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார். நள்ளிரவு முதல் விடாமல் பெய்த மழை காரணமாக மாவட்டத்தின் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது.
தஞ்சை ஆற்றில் உடைப்பு:
தஞ்சை மாவட்டம் முழுவதும் இரவு 9 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இன்றும் தொடர்கிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வடுவூர் அருகே ஓடும் வடவாற்றில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது பள்ளிகளில் நடந்து வரும் அரையாண்டு தேர்வு மழையால் ஒத்தி வைக்கப்பட்டு தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்காடான திருச்சி:
திருச்சியிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. திருச்சியில் 15.2 மில்லி மீட்டரும், திருச்சி விமான நிலையத்தில் 18.2 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
அதே போல புதுக்கோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. புதுக்கோட்டை ஆவூடையார் கோவில், கந்தர்வக் கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய இடங்களில் மழை விடாமல் பெய்து வருவதால் மீமிசல், அதிராமபட்டிணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
பலமணி நேரமாக நீடித்த மழை காரணமாக புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.
கரூரில்...:
இதேபோல் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் அதிகாலை 4 மணி முதல் பலத்த காற்றுடன் மழை கொட்டியது.
மதுரை, விருதுநகரில்...:
மதுரை மாவட்டத்தில் இன்று அதிகாலை பெய்யத் துவங்கிய மழை இன்று மதியம் வரை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இதே போல விருதுநகர் மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் அதிக மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
புதுவையும் மிதக்கிறது:
இதேபோல புதுச்சேரி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருவதால் அங்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடுகிறது. வாகனப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் இன்றும், நாளையும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதுவையில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications