மத்திய அரசு இடையிலேயே கவிழும்-வைகோ
நாகர்கோவில்: மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு 2008ம் ஆண்டு வரை நீடிக்காது. நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரும்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நாங்கள் மகத்தான வெற்றியை பெறுவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழகத்தில் அன்றாடம் ஏற்படும் மின்வெட்டை கண்டித்து மதிமுக சார்பில் வைகோ தலைமையில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது,
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அனைத்து மக்களையும் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே விவசாய விளை பொருட்களுக்கு விலை கிடைக்கவில்லை. உற்பத்தி செலவு அதிகமான சூழ்நிலையில், பயிர்களை பாதுகாக்க முடியாமல் அவர்கள் பரிதவிக்கிறார்கள்.
மின்சார தடையால் பல தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு ஆளாகி உள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த அரசு முறைப்படி திட்டமிடாததால் தான் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. கேட்டால் மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்கவில்லை என்கிறார்கள்.
மத்தியில் இவர்கள் தானே ஆட்சியில் உள்ளனர். நெய்வேலியில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை என்கிறார்கள். அவற்றை கேட்டு வாங்க வேண்டியது தானே. அதை பெற தவறியது ஏன்.
விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்கவில்லை. நெல் குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,000 கொடுக்க மத்திய அரசு முன் வரவில்லை. மத்திய அரசை தட்டிக் கேட்க கருணாநிதி தவறிவிட்டார். முல்லை பெரியார், காவிரி, பாலாறில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற தவறிவிட்டனர்.
மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு 2008ம் ஆண்டு வரை நீடிக்காது. நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரும்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நாங்கள் மேலும் வலுப்பெற்று மகத்தான வெற்றியை பெறுவோம் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications