தமிழகத்தில் வசிக்கும் மலேசிய குடிமக்கள், மாணவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

மலேசியாவில் சம உரிமை கோரி தமிழர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் வசிக்கும் மலேசிய நாட்டவர்களுக்கும், மாணவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மலேசிய துணைத் தூதரக அலுவலகத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மலேசியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் தங்கியிருக்கும் இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிப்படையாக தெரியாத அளவுக்கு ரகசியமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மலேசிய துணைத் தூதரக அலுவலகத்தில் கேட்டபோது, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி கூறுகையில், மலேசிய அரசு பாதுகாப்பு கோரி எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை.
இருப்பினும் பரஸ்பர நட்புறவின் அடிப்படையில், தமிழக அரசே, தமிழகத்தில் வாழும் மலேசியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பாதுகாப்பு நடவடிக்ைககள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
டிஜிபி அலுவலகத்தில் இதுகுறித்து விசாரித்தபோது, தமிழகத்தில் வசிக்கும் மலேசிய குடிமக்களுக்கு எந்தவித ஆபத்தும் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இது சாதாரண விஷயம்தான். முற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் மலேசியாவைச் சேர்ந்த 9 மாணவர்கள், 6 மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். அனைவரும் அவர்களது உறவினர் வீடுகளில் தங்கிப் படிக்கின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு தரும்படி மாநகர காவல்துறை ஆணையர் நந்தகோபாலன் உத்தரவின் பேரில், கூடுதல் துணை ஆணையர் ஜெயக்குமார் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications