பாதுகாப்பு தேவை என்ன? விரிவாக தெரிவிக்குமாறு ஜெ.வுக்கு உத்தரவு

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட இல்லத்திற்குப் போதிய பாதுகாப்பு கொடுக்கப்படாத காரணத்தினால் பலர் ஊடுறுவி பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தனக்கு மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பை அளிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நேற்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வக்கீல் ஜோதி வாதிடுகையில், ஜெயலலிதாவுக்கு மாநில அரசு புல்லட் புரூப் காருடன் டிரைவரையும் தர வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை மேற்பார்வையிட முன்னாள் டிஜிபி தலைமையில் கண்காணிப்புக் குழுவையும் அமைக்க வேண்டும். இந்தக் குழு அவ்வப்போது பாதுகாப்பு குறித்து கண்காணித்து, ஆய்வு செய்ய வேண்டும்.
அரசு கொடுத்துள்ள குண்டு துளைக்காத காரின் செயல்பாடு சந்தேகத்திற்குரியதாக உள்ளது.
ஜெயலிலதாவுக்கு வழங்கப்படும் அனைத்துக் காவலர்களுக்கும் வயர்லெஸ் கருவி தரப்பட வேண்டும். மேலும் ஜெயலலிதாவின் காருக்குப் பின்னால் ஒரு ஆம்புலன்ஸ் வேனும், செல்போன்களை செயலிழக்க வைக்கும் ஜாமர் வாகனமும் உடன் வர வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு வேண்டும் என்பதை அறிவதற்காக ஒரு உயர் போலீஸ் அதிகாரியை அவரிடம் அனுப்பி விவாதிக்க உத்தரவிட வேண்டும் என்றார் ஜோதி.
அப்போது அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி குறுக்கிட்டு, ஓய்வு பெற்ற டிஜிபி தலைமையில் கண்காணிப்புக் குழுவை நியமிக்க சாத்தியமே இல்லை.
மனுதாரரின் வக்கீல் விடுத்துள்ள பிற கோரிக்கைகள் குறித்து அரசுடன் கலந்து பேசிய பின்னர்தான் தெரிவிக்க முடியும் என்றார்.
இதையடுத்து ஜெயலலிதாவுக்கு என்னென்ன பாதுகாப்பு வேண்டும், உங்களது தேவைகள் என்ன என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறும் அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications