திமுகவில் இணைய பேராசிரியர் பொன்னுச்சாமி திட்டம்?
திருச்சி: சில காலத்திற்கு முன்பு தேமுதிகவில் இணைந்த முன்னால் அதிமுக அமைச்சர் பேராசிரியர் பொன்னுச்சாமி, திமுகவில் இணையப் போவதாக செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.
கடந்த அதிமுக அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் பேராசிரியர் பொன்னுசாமி. திருச்சி மாவட்டம் மருங்காபுரி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஊழல் வழக்கில் சிக்கி சிறைத் தண்டனை அனுபவித்தவர்.
அதன் பின்னர் அதிமுகவில் ஓரம் கட்டப்பட்டு விட்டார் பொன்னுச்சாமி. அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் படு அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில்தான் திடீரென தேமுதிகவில் இணைந்தார்
பேராசிரியர் பொன்னுச்சாமி.
அப்போது, ஊழலை ஒழிப்பேன் என்று பிரசாரம் செய்யும் விஜயகாந்த், ஊழல் வழக்கில் சிக்கி சிறைத் தண்டனை அனுபவித்தவரை உடன் சேர்ப்பதா என்று கட்சிக்குள்ளேயே சலசலப்பு கிளம்பியது.
இந்த நிலையில் தேமுதிகவில் சேர்ந்த பொன்னுச்சாமிக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காததால் அவர் மனம் வெதும்பி இருப்பதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் பொன்னுச்சாமியை திமுகவுக்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.
மருங்காபுரி தொகுதியில் பொன்னுச்சாமிக்கு இன்னும் கூட ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. பொன்னுச்சாமியை திமுக பக்கம் இழுத்தால், அந்த செல்வாக்கு திமுகவுக்கு திரும்பும் என்ற நம்பிக்கையில் ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகள் சிலர் பொன்னுச்சாமியை திமுகவுக்கு அழைத்து வரும் வேலையில் இறங்கியுள்ளனர்.
இந்த முயற்சிக்கு பொன்னுச்சாமி தரப்பில் என்ன பதில் தரப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், இது தேமுதிகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நடக்கும் முயற்சி, இதற்கு பொன்னுச்சாமி பலியாக மாட்டார், தேமுதிகவை விட்டு போக மாட்டார் என்று தேமுதிக தரப்பில் கூறுகிறார்கள்.
பேராசிரியர் அணி மாறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications