வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ. 200 கோடி - கருணாநிதி

கடந்த 2 நாட்களாக வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர் கருணாநிதி, வெள்ள பாதிப்புகள் குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதல் கட்ட ஆய்வுகளின்படி ரூ. 1500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், பல்வேறு துறை அதிகாரிகளிடமிருந்து அரசுக்கு வெள்ள பாதிப்புகள், இழப்பீடுகள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், மத்திய அரசின் நிதியுதவி கோரி விரிவான அறிக்கை அனுப்பப்படும்.
அதற்கு முன்பாக, நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி ரூ. 200 கோடி நிதியை ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அதிகாரிகளும், நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2 நாட்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி ஆய்வுக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தார்.
நெடுஞ்சாலைத் துறை சார்பில், 13 மாவட்டங்களில், 10 ஆயிரத்து 650 கிலோமீட்டர் தொலைவிலான சாலைகள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 62 பாலங்கள், 1400 சிறு பாலங்கள் சேதமடைந்துள்ளன. 184 இடங்களில் சாலைகள் விரிசலடைந்துள்ளன.
இவற்றை தற்காலிகமாக சரி செய்ய ரூ. 187 கோடி தேவைப்படும் எனவும், நிரந்தரமாக சரி செய்ய ரூ. 702 கோடி தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மழையால் பாதிக்கப்பட்ட குளங்கள், ஏரிகள், கால்வாய்கள், ஆறுகளை சரி செய்ய ரூ. 123 கோடி தேவைப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் மழையால் நீரில் மூழ்கி விட்ட பயிர்களுக்குரிய இழப்பீடாக ரூ. 100 கோடி வரை தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுவிர பல்வேறு துறைகளின் சார்பில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ. 390 கோடி தேவைப்படும் என அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக முதல் கட்ட மதிப்பீடுகளின்படி ரூ. 1500 கோடி வரை மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications