நாளை சபரிமலையில் மண்டல பூஜை

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (டிசம்பர் 27) மண்டல பூஜை நடக்கவுள்ளது.
இந்த மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி இக் கோவிலின் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் லட்சக்ணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இந் நிலையில் இன்று மாலை சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
இதற்காக கடந்த 23ம் தேதி ஆரன்முளை பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கி இன்று பம்பை வந்து சேருகிறது. அங்குள்ள கணபதி கோவில் முன் பக்தர்கள் தரிசனத்திற்காக தங்க அங்கி வைக்கப்படும்.
பின்னர், மேள தாளத்துடன் இந்த அங்கி சன்னிதானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். செல்லப்படுகிறது. பின்னர் நடை அடைக்கப்பட்டு சுவாமிக்கு அலங்காரம் நடைபெறும்.
மாலை 6.30 மணிக்கு சுவாமி தங்க அங்கியுடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதையடுத்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படும்.
இதையடுத்து மிக முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை வியாழக்கிழமை நடைபெறுகிறது.
நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், உஷ பூஜை ஆகியவை நடக்கும்.
இதைத் தொடர்ந்து பகல் 12.29 மணி முதல் 12.40 மணிக்குள் மீன ராசியில் மண்டல பூஜை நடைபெறும்.
இரவு 10.30 மணிக்கு அத்தாழ பூஜையும், 10.50 மணிக்கு ஹரிவராசனமும் முடிந்த பின் 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
இந்த மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பம்பை வரை பக்தர்கள் வரிசையில் நிற்கின்றர். சுமார் 20 மணி நேர காத்திருப்பிற்கு பின்னரே சுவாமியை தரிசிக்க முடிகிறது. அந்த அளவுக்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.


Click it and Unblock the Notifications
