ஹைதராபாத்தில் பட்டாசு இருந்த டிபன் பாக்ஸால் பெரும் பீதி
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தின் மையப் பகுதியில், தலைமைச் செயலகம் அருகே நாட்டு வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் மர்மமாக கிடந்த டிபன் பாக்ஸைப் போலீஸார் பிரித்துப் பார்த்தபோது அதில் சாதாரண பட்டாசுகள் இருந்தது தெரிய வந்தது.
ஹைதராபாத் நகரின் மையப் பகுதியில் உள்ளது என்.டி.ஆர். தோட்டம். தலைமைச் செயலகம் அருகே இது உள்ளது. புதன்கிழமை போலீஸாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், என்.டி.ஆர். தோட்டம் உள்ள இடத்தில் ஒரு டிபன் பாக்ஸ் கேட்பாரற்றுக் கிடப்பதாகவும், அதில் நாட்டு வெடிகுண்டுகள் இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் போலீஸ் படையுடன் அங்கு விரைந்தனர். என்.டி.ஆர். தோட்ட வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் கிடந்த டிபன் பாக்ஸை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் திறந்து பார்த்தனர்.
ஆனால் அதில் நாட்டு வெடிகுண்டு எதுவும் இல்லை. மாறாக சாதாரண பட்டாசுகள்தான் இருந்தன. இதுகுறித்து மத்திய மண்டல காவல்துறை துணை ஆணையர் முகம்மது இக்பால் கூறுகையில், முதலில் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகித்தோம். ஆனால் சோதனையில் அதில் சாதாரண வகை பட்டாசுகள்தான் இருந்தன.
புத்தாண்டுக்காக அதை யாரேனும் கொண்டு வந்திருக்கலாம். தவறி கீழே விழுந்திருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம் என்றார் அவர்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த பட்டாசு பாக்ஸ் இருந்த என்.டி.ஆர். தோட்டம், லும்பினி பார்க் எதிரே உள்ளது. இந்த லும்பினி பார்க்கில்தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி குண்டுவெடித்து, 10 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த வெடிகுண்டு பீதி காரணமாக நகர் முழுவதும் நேற்று பதட்டம் நிலவியது.












Click it and Unblock the Notifications