தேசிய கொடியை அவமதித்ததாக சானியா மீது வழக்கு
போபால்: தேசியக் கொடிக்கு அருகே கால் வைத்திருந்ததாக டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா மீது போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டென்னிஸ் விளையாட வந்தது முதல் பல்வேறு சர்ச்சைகளில் அடுத்தடுத்து சிக்கி வருகிறார் சானியா. ஆரம்பத்தில் அவர் அணிந்த உடைகள் சர்ச்சைக்குள்ளாகின.
பின்னர் நடிகை குஷ்பு கற்பு குறித்து தெரிவித்து கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசி, சர்ச்சையில் மாட்டினார்.
சமீபத்தில், ஹைதராபாத் மெக்கா மசூதியில் விளம்பரப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவர் மன்னிப்பு கேட்டதால் சர்ச்சை சரியானது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் இப்போது சிக்கியுள்ளார் சானியா. போபாலைச் சேர்ந்த பிரகாஷ் குமார் என்பவர் சானியா மீது தேசிய கொடியை அவமதித்ததாக கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சமீபத்தில் தனது ஆஸ்திரேலிய பயணத்தின்போது தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில், தனது காலை கொடியின் அருகே வைத்திருந்தார் சானியா. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் பிரகாஷ் குமார்.
இளைஞர் நலத்துறை அமைச்சர் என்ற வகையில், மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யரையும் பிரதிவாதியாக பிரகாஷ்குமார் சேர்த்துள்ளார்.
இந்த வழக்கு வருகிற 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதேபோலத்தான் சாமி சிலைகளுக்கு அருகில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததாக குஷ்பு சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி அவர் மீதும் வழக்குகள் போடப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.













Click it and Unblock the Notifications