ஜெ. - மோடி.. 'விருந்தும் மருந்தும்'!
-சிறப்புக் கட்டுரை
சென்னை: வரும் பொங்கல் தினத்தன்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு போயஸ் கார்டனில் விருந்து கொடுக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
குஜராத்தில் மூன்றாவது முறையாக ஹாட்-ரிக் வெற்றி பெற்ற மோடியை, ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து அவரை பொங்கல் விருந்து சாப்பிட அழைத்துள்ளார்.
கடந்த முறை மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஜெயலலிதா இம்முறை அதில் பங்கேற்கவில்லை. ஆனாலும் பாஜகவுடனான நட்புறவை வலுப்படுத்த மோடி மூலமாக அவர் காய் நகர்த்தி வருகிறார்.
கூட்டணி விஷயத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு எப்போதும் தடுமாற்றத்துடன் தான் இருந்து வருகிறது. முதலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தவர் ராஜீவின் மரணத்தால் வெல்லவில்லை என்று பேசி அந்தக் கூட்டணிக்கு தானே வேட்டு வைத்தார்.
பின்னர் பாஜக கூட்டணிக்குப் போனாலும், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியுடன் சேர்ந்து டீ பார்ட்டி நடத்தி வாஜ்பாயை அரசை கவிழ்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். தன் மீதான வருமான வரி வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் நிபந்தனையை வாஜ்பாய் ஏற்காததால் அந்த கவிழ்ப்பு நடந்ததாகக் கூறப்பட்டது. அதே வேகத்தில் பாஜக தலைவர் அத்வானிக்கு செலக்டிவ் அம்னீசியா என்று விமர்சனம் செய்தார்.
இதையடுத்து காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தலைகீழாக நின்று பார்த்தும் ஜெயலலிதாவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஆண்டோனியோ மொய்னோ, பதி பக்தி இல்லாதவர் என்றெல்லாம் மிகக் கடுமையாக விமர்சித்துவிட்டு பாஜக கூட்டணிக்குப் போனார். ஆனால் அங்கும் நெடு நாள் நீடிக்கவில்லை.
மக்களவைத் தேர்தலில் இடங்கள் பகிர்ந்து கொள்வதில் பாஜகவை படாத பாடுபடுத்தினார். அந்தத் தேர்தலில் பாஜக தோற்ற வேகத்திலேயே அதிலிருந்து வெளியேறினார்.
லேட்டஸ்டாக வந்தது மூன்றாவது அணி. இந்த அணி ஜெயலலிதாவிடம் பட்டபாடு ஜென்மத்திலும் மறக்க முடியாதது. இவரை நம்பி கூட்டணி அமைத்த தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் போன்றவர்கள் நடு ரோட்டில் நிற்கும் நிலை ஏற்பட்டது.
இந்தக் கூட்டணியில் இருந்து கொண்டே பாஜகவுடன் ரகசியமாக கைகோர்த்தார். துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் பைரோன் சிங் செகாவத்தை ஆதரித்தார். தனக்கே தெரியாமல் பாஜக வேட்பாளருக்கு அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டுவிட்டதாகக் கூறி பெரும் அரசியல் நகைப்புக்குள்ளானார்.
ஜெயலலிதாவின் ஆசிர்வாதத்தால் இப்போது மூன்றாவது அணியே காணாமல் போய்விட்டது.
ஆனாலும் காங்கிரசுடன் கைகோர்க்க ஜெயலலிதா திரைமறைவில் முயன்று பார்த்தார். காங்கிரஸில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் போல ஜெயலலிதாவின் விசிறிகள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் மூலம் முயன்று பார்த்தார் ஜெயலலிதா. ஆனால், திமுக ஆதரவு இல்லாமல் ஆட்சியில் நீடிக்க முடியாது என்பதால் ஜெயலலிதாவை ஏற்க காங்கிரஸ் முன் வரவில்லை.
இதற்கிடையே தேமுதிக தலைவர் விஜய்காந்தின் விஸ்வரூபம் இன்னொரு பக்கம். அவரது வளர்ச்சியால் மிகவும் ஆடிப் போய் இருக்கும் இரு முக்கிய அரசியல்வாதிகள் ராமதாசும் ஜெயலலிதாவும் தான். அடுத்தது திமுக.
இந் நிலையில் தான் விஜய்காந்த்தை வளைக்க பாஜக பிரம்மப்பிரயத்தனம் செய்தது. ஆனால், பிடி கொடுக்காமல் நழுவிட்டார் விஜய்காந்த். ஆனாலும் அவரது அரசியல் நிலைப்பாட்டில் சமீபகாலமாக பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது தான் ஜெயலலிதாவை மேலும் மிரட்டியுள்ளது.
கூட்டணியே வைக்க மாட்டேன் என்று கூறி வந்தவர், காங்கிரசுடன் கூட்டணிக்குத் தயார் என்று அறிவித்தது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் புளியைக் கரைத்தது மாதிரி ஆகிவிட்டது.
சோனியா-முதல்வர் கருணாநிதி இடையிலான மரியாதையும் நட்பும் தான் திமுக-காங்கிரஸ் கூட்டணியை இன்னும் நெருக்கமாக வைத்துள்ளது. இதில் சிக்கலை ஏற்படுத்தும் பலதரப்பட்ட முயற்சிகள் இதுவரை பலிக்கவில்லை.
இதனால் காங்கிரஸ் திமுகவுடனான தனது கூட்டணியை தொடரும் என்றே கருதப்படுகிறது. அப்படியே கூட்டணி உடைந்தாலும் விஜய்காந்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டு போய்விடும் காங்கிரஸ்.
அப்படி ஒரு கூட்டணி உருவானாலும் உருவாகாவிட்டாலும் பாதிக்கப்படப் போவது அதிமுக தான். இந்தக் கூட்டணி ஏற்பட்டால் திமுகவுடன் சேர்ந்து அதிமுகவும் பாதிக்கப்படும். உருவாகாவிட்டாலும் அதிமுக பாதிக்கப்படும்.
வெறும் மதிமுகவை வைத்துக் ெகாண்டு தேற முடியாது என்பதை உணர்ந்து கொண்டதாலும், பாமக தலைவர் ராமதாஸ் அடுத்து என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது என்பதாலும் மீண்டும் பாஜக வீட்டுக் கதவைத் தட்டியுள்ளார் ஜெயலலிதா.
அதிலும் எதிர்காலத்தில் பாஜகவுக்கு தேசிய அளவில் தலைமை தாங்கும் திட்டத்தில் காய் நகர்த்தி வரும் நரேந்திர மோடி மூலமாக இந்தக் கூட்டணி அமைந்தால் தனது அரசியல் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும் என நினைக்கிறார் ஜெயலலிதா.
அதிவானி கோஷ்டி- மோடி கோஷ்டி என பாஜகவில் பனிப் போர் நடக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் மோடி பக்கமாக சாய்ந்துள்ளார் ஜெயலலிதா.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் அத்வானிக்கும் கூட ஜெயலலிதா இதே போல ஒரு விருந்து கொடுத்தது நினைவிருக்கலாம். ஆனால், தேர்தலில் பாஜக தோற்றவுடன் கூட்டணியை முறித்துக் ெகாண்டார். அந்த விருந்து மருந்தானது.
இப்போது மோடியை விருந்துக்கு அழைத்துள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications