'பிளேம்': டி.வி.எஸ்சுக்கு தடை நீடிப்பு

டிவிஎஸ் நிறுவனம் புதிதாக உருவாக்கியுள்ள டிவிஎஸ் பிளேம் பைக்கில், சிசிவிடிஐ தொழில்நுட்பத்திலான என்ஜினை பயன்படுத்தியுள்ளது.
ஆனால் இந்தத் தொழில்நுட்பம், தங்களது நிறுவன பைக்குகளில் பயன்படுத்தி வரும் டிடிஎஸ்ஐ தொழில்நுட்பத்ைதக் காப்பி அடித்து உருவாக்கப்பட்டதாகும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புகார் கூறியது.
இதை மறுத்த டிவிஎஸ் நிறுவனம் பஜாஜ் நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 250 கோடி மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை கடந்த டிசம்பர் 20ம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டிவிஎஸ் நிறுவனம், புதிய பைக்குக்கான முன்பதிவையும், விற்பனையையும் மேற்கொள்ள அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து பஜாஜ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 18ம் தேதி பிறப்பித்த உத்தரவில் ஜனவரி 29ம் தேதி வரை புதிய பைக்குக்கான முன்பதிவை மேற்கொள்ள தடை விதித்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி டிவிஎஸ் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச், டிவிஎஸ் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் டிவிஎஸ் நிறுவன வழக்கை ஜனவரி 29ம் தேதி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications