முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள்: ஜெ. தாக்கு
சென்னை: தமிழகத்தில் தற்போது அமைதி நிலவுகிறது என்று ஆளுநர் உரை நிகழ்த்தியது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கவர்னர் உரை என்பது தொலைநோக்குப் பார்வை, கனவு, கனவை நினைவாக்கும் திட்டமாக இருக்க வேண்டும்.
ஆனால், இந்த கவர்னர் உரையின் பலன் பூஜ்யம் தான். தமிழகத்தில் அமைதி நிலவுகிறது என்று கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது.
நதி நீர்ப் பிரச்னையில் எந்தவொரு இறுதி முடிவும் இல்லாத நிலையில் அதிகாரம் பெற்ற அமைப்புகளின் முடிவுகளை மதித்து அனைத்து மாநிலங்களும் நடக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது கண்துடைப்பு, மோசடி நாடகம்.
இதற்கும் பணம் இருக்கிறது, அதற்கும் பணம் இருக்கிறது என்று கருணாநிதி பேசினார். ஆனால், கவர்னர் உரையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக சீரமைக்க தமிழக அரசிற்குத் தேவைப்படும் நிதியுதவியை உடனடியாக வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றும் வேலை.
அரசின் சாதனை என்பது திட்டப் பணிகளை நிறைவேற்றுவது தானே தவிர, வெறுமனே ஒப்புதல் அளிப்பது மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக அரசு பொறுப்பேற்று 20 மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டன. விலைவாசி உயர்வு குறித்து திமுக கூட்டணிக் கட்சிகளே போராட்டம் நடத்தின.
கவர்னர் உரையில் தமிழகத்தில் விலை வாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அரசின் சாதனையாக கூறப்பட்டுள்ளது. இது போன்ற அறிவிப்புகள் கேலிக்கூத்தானவை, நகைப்புக்குரியவை, எள்ளி நகையாடத்தக்கவை என்று ஜெயலலிதா தாக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications
