திருமாவளவன்: காங்.குக்கு ஆதரவு தந்த அதிமுக
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குறித்து விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் சபாநாயகருடன் வாதிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுகவினரும் கோஷமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சிகள் மற்றும் இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்று நான் பேசியதற்கு கடந்த 25ந் தேதி அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யுவில் கருத்துரிமை மீட்பு கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பதில் அளித்து பேசினார். அதுகுறித்து இன்றே விவாதிக்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஆவுடையப்பன், இந்த பிரச்சனையை இப்போது தான் என்னிடம் கொடுத்திருக்கிறீர்கள். உடனே எடுக்க முடியாது. படித்துப் பார்த்து தான் முடிவு செய்ய முடியும் என்று கூறினார்.
ஆனால் ஞானசேகரன் இன்றே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சபாநாயகரிடம் வாதாடினார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று சபாநாயகரிடம் இந்த பிரச்சனையை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அப்போது, அதிமுக உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆதரவாக உட்கார்ந்து கொண்டே குரல் எழுப்பினார்கள். இதனால் சபையில், சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுந்து, உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டிருக்கிறோம். இதை எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று சபாநாயகர் கூறவில்லை. நாளை எடுத்துக் கொள்வோம் என்று தான் கூறினார். அரசிடமிருந்து அறிக்கை பெற்று பதில் அளிக்க ஒருநாள் கால அவகாசம் வேண்டும் என்று கேட்கிறோம் என்றார்.
இதையடுத்து அமர்ந்தார் ஞானசேகரன்.












Click it and Unblock the Notifications