விஜய் பிரச்சாரம் செய்தாலே வெற்றி உறுதியா? விக்கிரவாண்டி மாநாடு காட்டும் அரசியல் எதார்த்தம்!
சென்னை: தமிழக அரசியலில் அண்மைக் காலமாக ஒரு புதிய பிம்பம் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு வருகிறது. விஜய் எங்கு சென்று பேசினாலும் அங்கே வெற்றி நிச்சயம் என்கிற ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மையா? விஜய் பிரச்சாரம் செய்தாலே அந்த தொகுதியில் தவெக வெல்லுமா என்ற கேள்வி உள்ளது.
அதாவது விஜய் வந்து தவெக வேட்பாளர் ஒருவருக்கு பிரச்சாரம் செய்தால்.. அங்கே அந்த வேட்பாளர் வெல்வது உறுதி என்று வாதம் வைக்கப்படுகிறது. முக்கியமாக தனது தமிழக வெற்றி கழகம் கட்சியில் புதிதாக இணையும் பிற கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களுக்கு, இடைத்தேர்தல்களில் தாம் நேரில் வந்து தீவிரப் பிரசாரம் செய்து அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக விஜய் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

விஜய் நம்பிக்கை
நான் உங்களுக்கு பிரச்சாரம் செய்வேன்.. நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என்று விஜய் உறுதி அளிப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு தன்னுடைய பிரச்சாரமே காரணம் என்றும் விஜய் கூறி வருகிறார். தனது வெறும் 5 நிமிடப் பேச்சே கொளத்தூரில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றும், அதுவே தங்களுக்கு சாதகமாக அமைந்தது என்றும் விஜய் பேசுவதை காண முடிகிறது.
ஆனால், இந்த வாக்குறுதிகளும் பிம்பங்களும் கள எதார்த்தத்திற்கு ஏற்றதாக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் பேசுவது உண்மையா ?
உண்மையில் இந்த வாதங்கள் அனைத்தும் உண்மைதானா? இந்த அரசியல் கூற்றுகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிய, விக்கிரவாண்டியில் தவெக நடத்திய பிரம்மாண்ட தொடக்க மாநாட்டையும், அந்த பகுதிகளின் தேர்தல் முடிவுகளையும் நாம் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
விக்கிரவாண்டியைச் சுற்றியுள்ள 8 முக்கிய சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தால், இந்த விஜய் பேசுவதன் உண்மை முகம் வெளிப்படும். விக்கிரவாண்டி மாநாட்டுத் திடலைச் சுற்றியுள்ள 8 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்துள்ளன:
செஞ்சி - பாமக
வானூர் - திமுக
விழுப்புரம் - திமுக
மயிலம் - அதிமுக
திருக்கோவிலூர் - அதிமுக
திண்டிவனம் - விசிக
விக்கிரவாண்டி - பாமக
கீழ்பென்னாத்தூர் - அதிமுக
இந்த தேர்தல் முடிவுகளை மிக உன்னிப்பாக கவனித்தால் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை புலப்படும். தவெகவின் மிக பிரம்மாண்டமான தொடக்க மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் அதன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் சுற்றியுள்ள 8 தொகுதிகளில் ஒன்றில் கூட தவெகவால் வெற்றியைப் பதிவு செய்ய முடியவில்லை.
மாநாடு நடந்த மையப் பகுதியிலேயே இந்த நிலை என்றால், விஜய் வந்து பேசினால் மட்டுமே தொகுதி மக்கள் அப்படியே வாக்களித்து விடுவார்கள் என்று நம்புவது எந்த வகையில் நியாயம்?
எனவே, விஜய் ஒரு தொகுதிக்கு நேரில் வந்து பேசிவிட்டால் மட்டுமே அங்கு வெற்றி எளிதாகக் கிடைத்துவிடும் என்று பரப்பப்படும் கருத்துக்கள் அனைத்தும் வெறும் வெற்று விளம்பர உத்திகளே தவிர, அதில் எள் அளவும் எதார்த்த உண்மை இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
இது போன்ற கருத்துக்கள் அனைத்தும் தேர்தலை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட விளம்பர தந்திரங்கள் மட்டுமே என்ற கருத்தும் வைக்கப்படுகிறது.
யதார்த்த நிலை இவ்வாறு இருக்க, விஜய்யின் பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கூடும் கூட்டத்தை வைத்து அவரது பேச்சிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதாகக் கூற முடியாது. அந்தப் பொதுக்கூட்டங்களுக்கு வரும் மக்கள், அவரது அரசியல் கருத்துக்களாலோ அல்லது கொள்கை விளக்கப் பேச்சுகளாலோ ஈர்க்கப்பட்டு மட்டும் வருகிறார்கள் என்று சொல்ல முடியாது.
மாறாக, ஒரு திரையுலக நட்சத்திரத்தைப் பார்க்கும் ஆவலில் மட்டுமே பெரும்பாலானோர் கூடுகிறார்கள் என்ற கருத்தும் வைக்கப்படுகிறது. உண்மையில், விஜய் மேடைகளில் அதிகமாகப் பேசப் பேச, மக்கள் அவர் மீது வைத்திருந்த மரியாதையும் மதிப்பும் குறைந்து கொண்டே வருவதாகவும் ஒரு சாரார் கருத்து வைக்கின்றனர்.














Click it and Unblock the Notifications