கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு கழுத்தில் துளை போட்டு டிரக்கியாஸ்டமி சிகிச்சை? உண்மை என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் இருந்து எந்தவொரு அறிக்கையும் வெளியாகாமல் உள்ளது. இதனால் அவரது உடல்நலன் குறித்துப் பல்வேறு வதந்திகளும் ஊகங்களும் ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் அவருக்குப் பல்துறை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை இழந்தது ஒருபுறம் எனில், கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தோற்றது அந்தக் கட்சியினரை மட்டுமின்றி எதிர்க்கட்சியினரையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முன்னாள் முதல்வரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற த.வெ.க.-வின் எம்.எல்.ஏ.-வான வி.எஸ்.பாபு, ஸ்டாலின் பாணியில் கைகளில் செய்கை செய்து பிரபலம் ஆனார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை நல்ல உடல்நலத்துடன் தான் இருந்தார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற அவருக்கு, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

vs babu Kolathur mla

இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குத் தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி முதல்வர் விஜய் மருத்துவமனைக்குச் சென்று வி.எஸ்.பாபுவைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், உடல்நிலை முன்னேற்றம் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்துச் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வதந்திகள் பரவி வருகின்றன. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தது. ஆனால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக அறிக்கைகள் வெளியாகாததால், மீண்டும் அவரது உடல்நிலை குறித்துப் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகத் தொடங்கின.

வி.எஸ்.பாபுவுக்குச் சுவாசப் பிரச்சனைக்காகத் தற்போது கழுத்தின் முன்பகுதியில் துளையிட்டு 'டிரக்கியாஸ்டமி' கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகப் பிரபல ஆன்லைன் ஊடகம் ஒன்றில் செய்திகள் வெளியாகின. இதுபற்றி விசாரித்த போது, "அதுபோன்று எந்தக் கருவியும் பொருத்தப்படவில்லை; வி.எஸ்.பாபு நலமுடன் உள்ளார்" என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

'டிரக்கியாஸ்டமி' கருவி என்பது ஒரு நோயாளியால் வாய் அல்லது மூக்கு வழியாகச் சரியாக மூச்சுவிட முடியாதபோது, கழுத்தின் முன்பகுதியில் சிறிய துளை ஏற்படுத்தி, நேரடியாக மூச்சுக் குழாயில் ஒரு குழாய் பொருத்துவதுதான் ஆகும். அந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக வதந்திகள் பரவிய நிலையில், "அப்படி எதுவும் பொருத்தப்படவில்லை; அவர் நலமுடன் இருக்கிறார்" என்று கூறப்பட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும் வி.எஸ்.பாபுவுக்குப் பல்துறை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+