பட்டா மாறுதல், நில அளவீடு.. சிவகாசி, சிட்லப்பாக்கத்தில் சிக்கிய அரசு அதிகாரிகள்.. 9000க்காக அசிங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள்.. அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டும் என்று முதல்வர் விஜய் தொடர்ந்து சொல்லி வருகிறார். லஞ்சம், ஊழலை ஒழிப்பது தவெக ஆட்சியின் முக்கியமான இலக்குகளில் ஒன்றாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு நிர்வாகத்தில் லஞ்சம் வாங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு நேற்று நடந்த 2 சம்பவங்கள் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளன. அதுவும் தமிழகத்தின் 2 வெவ்வேறு பகுதிகளில், ஒரே நாளில் நடந்த இந்த சம்பவங்களில், அரசு அதிகாரிகள் 2 பேர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

லஞ்சம், ஊழலை ஒழிப்போம் என்று அரசியல் களத்தில் வாக்குறுதிகள் வருவது வழக்கம்தான். ஆனால் அரசு அலுவலகத்துக்குப் போகும் சாதாரண மக்கள், தங்கள் வேலைக்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை மாறுகிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி.

Chennai Sivakasi Chitlapakkam Government Officials

தவெக ஆட்சி

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்சம், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் தமிழகத்தின் 2 வெவ்வேறு பகுதிகளில் நடந்த சம்பவங்கள் கவனம் பெற்றுள்ளன.

ஒருபக்கம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாவட்ட சுகாதார அலுவலர் ஒருவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் சிட்லப்பாக்கத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்காக ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

முதலில் சிவகாசி சம்பவத்தை பார்க்கலாம்... வெம்பக்கோட்டை அருகே எதிர்கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். 31 வயதான இவரது கார், தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய சுகாதார இயக்கத்தின் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட நடமாடும் குழுவுக்காக ஒப்பந்த அடிப்படையில் மாத வாடகைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

சிவகாசி மாத வாடகை

இந்த காருக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான வாடகை தொகை வழங்கப்பட வேண்டியிருந்தது. அந்த 2 மாதங்களுக்கான தொகையை விடுவிக்க, சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர் ஜெகவீரபாண்டியன், ஒரு மாதத்திற்கு ரூ.2,500 வீதம் மொத்தம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பாண்டீஸ்வரன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் கொடுத்த அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய பணத்தை நேற்று மாலை பாண்டீஸ்வரன், சுகாதார அலுவலர் ஜெகவீரபாண்டியனிடம் கொடுத்தார். பணத்தை அவர் பெற்றதும், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராமசந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உள்ளிட்ட போலீசார் அவரை கைது செய்தனர்.

சென்னை சிட்லபாக்கம்

இதே நாளில் சிட்லப்பாக்கத்திலும் லஞ்ச புகார் தொடர்பாக கைது நடந்துள்ளது. தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜ்குமார், தன்னுடைய நிலத்தை அளவீடு செய்து, பட்டாவில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்த தனது அப்பாவின் பெயரை திருத்தக் கோரி தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.

அந்த மனுவை பரிசீலித்து, மேல் நடவடிக்கைக்காக பரிந்துரை செய்ய சிட்லப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் பிரசாந்த் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று கேட்டாராம்.. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோஜ்குமார், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் நோட்டுகளை மனோஜ்குமார், வருவாய் ஆய்வாளர் பிரசாந்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பிரசாந்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் லஞ்சம், ஊழலை ஒழிப்போம் என்று கூறியது தவெக அரசு.. அதன்படியே, லஞ்சம் ஊழல் ஒழிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், ஒரே நாளில் நடந்த இந்த 2 கைது சம்பவங்களும் அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் இன்னும் தொடர்வதை காட்டுகின்றன. அதே நேரத்தில், லஞ்சம் கேட்பவர்களை புகார் அளித்து சிக்க வைக்கும் வகையில் பொதுமக்களும் விழிப்புடன் இருப்பது இந்த 2 சம்பவங்களிலும் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+