மக்களுடன் மட்டும்தான் கூட்டணி வைப்பேன்: விஜயகாந்த்
காஞ்சிபுரம்: மக்களுடன் மட்டும்தான் கூட்டணி என்பதில் மாற்றம் இல்லை. வேறு யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஐந்து தேமுதிக தொண்டர்களின் திருமணத்தை அவர்களின் இல்லத்திற்கே சென்று நேற்று நடத்தி வைத்தார் விஜயகாந்த்.
இருங்காட்டுக்கோட்டையில் சதாசிவம் - கவிதா, ஸ்ரீபெரும்புதூரில் பாண்டியன் - கீதா, சுங்குவார் சத்திரத்தில் கமல் - ஜீவா, திம்ம சமுத்திரத்தில் உமாபதி - மகேஸ்வரி, தாமலில் சுரேஷ் - புவனேஸ்வரி ஆகியோரது திருமணங்களை விஜயகாந்த் நடத்தி வைத்தார்.
விஜயகாந்த்துடன் அவரது மனைவி பிரேமலதாவும் திருமணங்களில் கலந்து கொண்டார்.
திருமண நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அனகை டி.முருகேசன், தலைமை தாங்கினார்.
விழாவில் விஜயகாந்த் பேசுகையில், அரசியல் கட்சி தலைவர்கள் கட்சி தொண்டரின் வீட்டிற்கு சென்று திருமணம் நடத்தி வைப்பது கிடையாது. நான் இந்த திருமணத் திற்கு வருவேனா? வரமாட்டேனா? என்று சிலர் நினைத்திருக்கலாம். சாதாரண தொண்டர்களின் திருமணத்தில் கலந்து கொள்வதில் தான் எனக்கு மகிழ்ச்சியாகும். அதை இந்த நிகழ்ச்சி மூலம் அனைவரும் அறிந்திருக்கலாம். நான் என்றைக்கும் மக்களை மதிப்பவன். மக்களோடு மக்களாக இருப்பவன்.
நான் தெய்வத்தையும், மக்களையும் நம்பித்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். உங்கள் மூலமாக நான் தெய்வத்தை பார்க்கிறேன். மக்களோடு மட்டுமே கூட்டணி. மக்கள் என்னுடன் இருப்பதால் எனக்கு கவலையில்லை. எப்பொழுதுமே நான் மனதில் பட்டதை தைரியமாக பேசுவேன். அந்த தைரியம் இருந்ததால் தான், எதிர்ப்புகள் இருக்கும் என்று தெரிந்தும் கட்சி ஆரம்பித்தேன்.
நான் கட்சி ஆரம்பித்தவுடன் என்னை எவ்வளவோ படுத்தினார்கள். திருமண மண்டபத்தை இடித்தார்கள். இழிவாகவும் பேசினார்கள். என்னிடம் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். என் தைரியத்தை மட்டும் வாங்க முடியாது.
மணமக்களாகிய நீங்கள் என்னை போல் தைரியத்துடன் வாழ்க்கையை தொடங்க வேண்டும். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையுடன், விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை எந்த நேரத்திலும் வரக்கூடாது. அதற்கு என் வாழ்க்கையை நீங்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். நான் படிக்காதவன், என் மனைவி படித்தவர். எங்களுக்குள் எந்த தாழ்வு மனப்பான்மையும் கிடையாது. நான் சினிமாவில் நடிப்பதால் பல கிசுகிசுக்கள் வரும். அதையொல்லம் என் மனைவி பொருட்படுத்த மாட்டார்.
அதனால் நாங்கள் குழந்தைகளுடன் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ்கிறோம். அதைபோல் மண மக்களாகிய நீங்கள் நிம்மதியாக வாழ்க்கையை வாழ வேண்டும்.
பெண்களுக்கு 2 குலதெய்வங்கள் உண்டு. ஒன்று பிறந்த வீடு, 2வது புகுந்த வீடு. அதனால் தான் பெண்களை சக்தி என்று சொல்வார்கள். கணவனே கண்கண்ட தெய்வம் என்று எல்லாரும் சொல்வார்கள். ஆனால் நாம் மனைவியே கண்கண்ட தெய்வம் என்று சொல்ல வேண்டும்.
மணமக்களாகிய நீங்கள் உங்கள் சந்ததிகளுக்கு வரதட்சணை வாங்க மட்டோம் என்று உறுதி எடுக்க வேண்டும். அதேபோல், தேமுதிக தொண்டர்கள் அனைவரும் எந்த காரணத்தை கொண்டும் வரதட்சணை வாங்க மட்டோம் என்று உறுதி எடுக்க வேண்டும்.
எனக்கு மக்கள் நலம் தான் முக்கியம். அவர்கள் நல்லபடியாக இருக்க நான் பாடுபடுகிறேன். விஜயகாந்த் வாழ்ந்தான் என்றால் அது மக்களுக்காக வாழ்ந்தான் என்று இருக்க வேண்டும். அந்த அளவிற்கு மக்களை நேசிக்கிறேன்.
இன்றைக்கு அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இது திருமண வீடு என்பதால் நான் சுருக்கமாக பேசுகிறேன். அதிகமாக அரசியல் பேச விரும்பவில்லை.
கடந்த தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். வரும் எம்.பி. தேர்தலில் 2,000 ரூபாய் கொடுப்பார்கள். வாங்கி கொள்ளுங்கள் நோட்டு உங்களுக்கு; ஓட்டு எனக்கு.
தேமுதிகவைப் பொறுத்தவரை தனித்து போட்டியிடுவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மத்தியில் காங்கிரஸ், பிஜேபி அல்லாத 3வது அணி உருவாக வேண்டும் என்று பேசி வருகிறார்கள். அதேபோன்று திமுக, அதிமுக அல்லாத கட்சியினர் இணைந்து மாற்று அணி உருவாக்க வேண்டும் என்றும் கூறிவருகிறார்கள்.
கூட்டணியை நம்புகிறவர்கள்தான் இப்படி பேசுவார்கள். என்னுடைய கூட்டணி மக்களுடன் மட்டும்தான். எனவே இதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.
தமிழக அரசின் திருமண உதவி வழங்கும் திட்டத்தில் இடைத் தரகர்களை அணுக வேண்டிய நிலை இருப்பதாக கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது பிற துறைகளிலும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் இருக்கும் என்று சந்தேகிக்கிறேன் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications