ஜெயலலிதா பிறந்த நாள்: மதுரையில் மாணவர்களுக்கு இலவச டியூசன்

வரும் பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் 60வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் மதுரை மாவட்ட அதிமுக செயலாளர் செல்லூர் ராஜூ, ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மதுரை மாவட்டத்தின் 72 வார்டுகளிலும் ஜெலலிதாவின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள், கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் ஆகியவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலவச டியூசன் பயிற்சி:
மேலும் இம்முறை ஏழை-எளிய மாணவர்களுக்கு மதுரையில் 10 இடங்களில் டியூசன் பயிற்சியை இலவசமாக வழங்க மதுரை நகர அதிமுக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அது தவிர பள்ளி இறுதி ஆண்டு தேர்வில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பரிசும், விளையாட்டு வீரர்களுக்கு நற்சான்றிதழும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் நகரான மதுரை
ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு முன்பாக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் பிறந்த நாள் வருகிறது. அதனால் இப்பொழுது மதுரையில் எங்கு பார்த்தாலும் ராட்சத டிஜிட்டல் பேனர்களாக காட்சியளிக்கிறது.
பல இடங்களில் காணப்படும் 100 அடி உயர பேனர்கள் வாகன ஓட்டிகளை கண்டிப்பாக விபத்துக்குள்ளாக்குவது நிச்சயம். மதுரை முழுவதும் மு.க.அழகிரியின் பேனர்கள் நிறைந்துள்ளதால் அதிமுக விசுவாசிகள் அம்மாவின் பேனர்களை வைக்க இடமில்லாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அழகிரி ஆதரவாளர்களின் கிரிக்கெட் போட்டி:
மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் வரும் ஜனவரி 30ம் தேதி அவரின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள ரயில்வே மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.50,000 பரிசுத் தொகையை நேற்று மு.க.அழகிரி வழங்கினார்.
இது மட்டுமில்லாது பல்வேறு இடங்களில் அழகிரி ஆதரவாளர்கள் ஏழை-எளியவர்களுக்கு உதவிகள் செய்ய வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications