தற்காலிக அரசு ஊழியர்கள் கோரிக்கை: நீதிமன்றம் நிராகரிப்பு!
மதுரை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (TNPSC) நடத்தும் சிறப்புத் தேர்வில் தோல்வியடைந்தாலும் தற்போது தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துவிட்டது.
கடந்த 2003ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர். இதையடுத்து அவர்களை கூண்டோடு சஸ்பெண்ட் செய்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
மேலும் சுமார் 11,350 பேரை வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்து தலா ரூ.4,000 தொகுப்பு ஊதியத்தில் நியமித்தார். திமுக ஆட்சி வந்தவுடன் இவர்களது வேலைக்கு ஆப்பு வைக்கப்படலாம் என்ற அச்சம் நிலவியது.
ஆனால், இவர்களில் 4,103 பேருக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த தேர்வு குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இதை எதிர்த்து தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடக்கும் சிறப்புத் தேர்வு வரும் 17ம் தேதி நடக்கிறது. 11,350 பணியாளர்களுக்கும் சிறப்பு தேர்வு நடத்த அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
அத்தேர்வில் தோல்வி அடைந்தாலும் தற்போது தற்காலிக பணியாளர்களாக பணியாற்றும் பணியாளர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி தனது உத்தரவில், அரசு பணியாளர் தேர்வாணையம் வெளிட்ட அறிவிப்பில் எவ்வித சட்ட விரோதமோ அல்லது முரண்பாடுகளோ இருப்பதாக தெரியவில்லை. அந்த அறிவிப்பால் மனுதாரருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. பாதிப்பு ஏதும் இருந்தால் மனுதாரர் அரசை அணுகி பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications