Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிட்னி மோசடி மன்னன் அமீத் குமார் நேபாளத்தில் கைது

Subscribe to Oneindia Tamil

Amitkumar
காத்மாண்டு: டெல்லி அருகே குர்கானில் 500க்கும் மேற்பட்டோரிடம் சிறுநீரகங்களை மோசடியாக பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தலைமறைவான டாக்டர் அமீத் குமார், நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹரியானா மாநிலம் குர்கானில் நடந்த மிகப் பெரிய சிறுநீரக மோசடி செய்தி வெளியாகி நாட்டையே உலுக்கியது. டாக்டர் அமீத் குமாரும், அவருக்கு உடந்தையாக இருந்த டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோர் இணைந்து 500க்கும் மேற்பட்டோரிடம் சிறுநீரகங்களை மோசடியாக பெற்று, வெளிநாட்டினரிடம் அவற்றை பல லட்சம் பணத்தைப் பெற்றுப் பொருத்தியது தெரிய வந்தது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அமீத்குமாரின் கூட்டாளியான டாக்டர் உபேந்திரா உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

டாக்டர் அமீத்குமார் மட்டும் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரைப் பிடிக்க இன்டர்போல் மூலம் சிபிஐ நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து அமீத்குமார் குறித்த ரெட் அலர்ட் உத்தரவை இன்டர்போல் பிறப்பித்தது.

அமீத்குமாருக்கு சொந்தமாக கனடாவில் ஒரு வீடு உள்ளது தெரிய வந்தது. அங்கு அவர் வரக் கூடும் என நினைத்து கனடா போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அமீத்குமார் அங்கு வரவில்லை.

இந்த நிலையில் நேபாளத்தில் அமீத்குமார் சிக்கியுள்ளார். அவரை நேபாள நாட்டு போலீஸார் கைது ெசய்துள்ளனர்.

தெற்கு நேபாளத்தில், இந்திய எல்லைப் பகுதியில் உள்ள செளராகா என்ற ஊரையொட்டி உள்ள வனப்பகுதியில், ஒரு ரிசார்ட்டில் அமீத் குமார் தங்கியிருந்தார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்தவுடன் காத்மாண்டு போலீஸார் அங்கு விரைந்து சென்று அந்த ரிசார்ட்டை முற்றுகையிட்டு அமீத்குமாரை வளைத்துப் பிடித்தனர்.

இந்தத் தகவல் இந்திய அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அமீத்குமார் கைது செய்யப்பட்டது முதலில் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பின்னர் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜெய்ஸ்வால் இத்தகவலை உறுதி செய்தார்.

அமீத்குமாரை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தும்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

கைது செய்யப்பட்ட டாக்டர் அமீத் குமார் பின்னர் சாலை மார்க்கமாக தலைநகர் காத்மாண்டுவுக்கு கொண்டு வரப்பட்டார். தற்போது அவர் ஹனுமன்தோகா காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த டாக்டர் அமீத் குமார், தனது நேபாள கூட்டாளி மனீஷ் சிங்குடன், நேற்று காலை 10 மணிக்கு செளராகா, ஹோட்டல் வைல்ட்லைப் கேம்ப் என்கிற ரிசார்ட்டுக்கு வந்துள்ளார். அங்குள் அறை எண் 6ல் அவர்கள் தங்கியுள்ளனர்.

டாக்டர் அமீத்குமார், தலையில் தொப்பியும், கூலிங் கிளாஸும் அணிந்திருந்ததாக அவரை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளை நிற உடையில் அவர் இருந்துள்ளார்.

அமீத்குமார் குறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் படை அங்கு விரைந்தது. ஹோட்டல் வரவேற்பாளரிடம் அமீத்குமாரின் படத்தைக் காட்டி போலீஸார் விசாரித்தபோது, அவர் அறை எண் 6ல் தங்கியிருப்பதாக உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து போலீஸார் அறை எண் 6ஐ முற்றுகையிட்டனர். போலீஸாரைப் பார்த்ததும் அமீத்குமார் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் சரணடைந்து விட்டாராம்.

ஆனால் அவரது கூட்டாளி சிங் போலீஸாரிடம் சிக்காமல் தப்பி விட்டார்.

இந்திய போலீஸிடமிருந்து தப்பிய டாக்டர் அமீத்குமார் நேபாள போலீஸாரின் மின்னல் வேக நடவடிக்கையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் அமீத்குமாரின் தம்பியான டாக்டர் ஜீவன் குமாரும் சிறுநீரக மோசடியில் தேடப்பட்டு வருகிறார். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+