அதிமுகவினருடன் கம்யூனிஸ்டுகளை வாரும் கருணாநிதி
சென்னை: அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு புதிய வீடுகள் அதிகளவில் கட்டப்பட்டது என்ற தவறான தகவல்களை கூறிய அதிமுக உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தரிசு நிலத்தைப் பண்படுத்தி நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு அளிக்கின்ற திட்டம் குறித்து ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேரவையில் குறை கூறப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் இதுவரை 1 லட்சத்து 38 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 1 லட்சத்து 61 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
அதிமுக உறுப்பினர் இது பற்றி குறைபட்டுப் பேசியபோது, சேப்பாக்கத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நான் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக கூறியதாகவும், அதற்கான ஆதாரமாக முரசொலி பேப்பரையெல்லாம் தேடிப்பிடித்து பேரவையிலே கொண்டு வந்து காட்டினார்.
திமுக தேர்தல் அறிக்கையில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் என்று குறிப்பிட்டவுடன், அதிமுக தலைவி எங்கேயிருக்கிறது 50 லட்சம் ஏக்கர் என்று கேட்டபோது, உங்கள் ஆட்சியின் நிதிநிலை அறிக்கையிலேயே 50 லட்சம் ஏக்கர் என்று உள்ளதே என்று நான் அப்போது எடுத்துக் காட்டினேன்.
மாநில வருவாய்த்துறை அமைச்சர் தம்பி ஐ.பெரியசாமி சில நாட்களுக்கு முன்பே சட்டப் பேரவையிலேயே அதைப்பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார்.
அப்போது, தமிழ்நாட்டில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பது உண்மை. தரிசு நிலம் என்றால், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் அல்ல. அந்த 50 லட்சம் ஏக்கர் என்பது தனியாருக்கும் சொந்தமான, விவசாயம் செய்யாமல் இருக்கின்ற தரிசு நிலம்தான் 50 லட்சம் ஏக்கர் என்பது.
அரசாங்கம் இப்போது முயற்சி எடுத்து, அரசு புறம்போக்கு நிலங்களைத்தான், நிலமற்ற ஏழை எளியவர்களுக்கு வழங்குகிறோமே தவிர, தனியாருக்குச் சொந்தமான தரிசு நிலங்களை-விவசாயம் செய்யாத நிலங்களை அரசு எடுத்துக் கொடுப்பதற்கு எந்த முயற்சியும் தற்போது எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இதுதான் உண்மை.
ஆனால், 50 லட்சம் ஏக்கர் எங்கேயிருக்கிறது, தேர்தல் அறிக்கையில் எப்படி தெரிவித்தீர்கள், அறிவிப்பே பொய்யானது என்றெல்லாம் அதிமுக தலைவி ஜெயலலிதா கேள்வி கேட்டபோதுதான், உங்கள் நிதிநிலை அறிக்கையிலேயே 50 லட்சம் ஏக்கர் என்று சொல்லியிருக்கிறீர்களே என்று அந்த விவரத்தை நான் அப்போது எடுத்துக் காட்டினேன்.
திமுக ஆட்சியில் தரிசு நிலங்களை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்குவது பற்றி குறை கூறும் அதிமுகவினர் அவர்களது ஐந்தாண்டு கால அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நிலம் 8,371 ஏக்கர். அதனால் பயனடைந்தோர் 6,439 பேர்.
தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் வழங்கப்பட்டுள்ள நிலம் 1,61,000 ஏக்கர் இதனால் பயனடைந்தோர் 1,38,000 பேர்.
இதற்குப் பிறகும் இந்தத் திட்டத்தைப் பற்றி குறை கூற அதிமுகவினருக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகதான் இதனைக்குறை கூறுகிறார்கள் என்றால், தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏன் இன்னமும் லட்சக்கணக்கான நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்கவில்லை என்று தொடர்ந்து குறை கூறி வருகிறார்கள்.
அவர்களுக்கும் இதிலே விளக்கமளிக்க வேண்டுமென்பதற்காக அவர்களுடைய கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களிலே எந்த அளவிற்கு இவ்வாறு நிலம் வழங்கப்பட்டுள்ளன என்ற விவரங்களைக் கேட்டு பெறுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்து, அதன்படி கிடைக்கப் பெற்ற விவரங்கள் இதோ பின்வருமாறு,
2006-2007 மற்றும் 2007 டிசம்பர் வரை கேரளாவில் வழங்கப்பட்ட நிலம் 188 ஏக்கர். பயனாளிகள் 494 பேர்.
திரிபுராவில் வழங்கப்பட்ட நிலம் 1,345 ஏக்கர் பயனாளிகள் 1,257 பேர்.
மேற்கு வங்கத்தில் -வழங்கப்பட்ட நிலம் 26,838 ஏக்கர் பயனாளிகள் 1,15,950 பேர். (மேற்கு வங்க மாநிலத்தில் சராசரியாக ஒரு நபருக்கு கால் ஏக்கருக்கும் குறைவான நிலம்தான் வழங்கப்பட்டுள்ளது)
ஆனால்-இதே காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட நிலம் 1,60,671 ஏக்கர் பயனாளிகள் 1,37,995 பேர்.
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்குவதைப் போலவே-வீட்டு மனைப்பட்டா வழங்குவது பற்றியும்-பெரிதாக இந்த அரசு மீது குறை கூறப்படுகிறது. இந்தக் குறையைக்கூட கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள்தான் ஏன் இன்னமும் லட்சக்கணக்கிலே மனைப்பட்டா வழங்கவில்லை என்று குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
30 லட்சம் பேருக்கு 3 மாதங்களில் வீட்டு மனைப்பட்டா கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். போராட்டம் நடத்துவதாக அறிக்கை கொடுப்பதும், ஊருக்கு ஊர் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
உண்மையிலேயே வீட்டுமனைப் பட்டாக்கள் விரைவில் அதிகம் பேருக்குக் கொடுக்கப்பட வேண்டுமென்பதற்காகத்தான் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது, வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்குவது பற்றி நீண்ட நேரம் விவாதித்து இந்த ஆண்டு முடிவதற்குள்,
அதாவது மார்ச் திங்கள் 2008-க்குள் மூன்று இலட்சம் வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கியே ஆக வேண்டுமென்றும், அந்தப் பணியிலே மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விரைந்து பணியாற்ற வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டு, அவ்வாறே மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எல்லாம் முயற்சி மேற்கொண்டு, வேறு எந்த ஆட்சிக் காலத்திலும் இல்லாத அளவிற்கு மூன்று இலட்சம் என்ற இலக்கினை 3 மாத காலத்திற்கு முன்பாகவே நிறைவு செய்திருக்கிறோம்.
தமிழகத்திலே இந்தளவிற்கு ஆளுங்கட்சியைக் குறை கூறி ஊக்கப்படுத்தும், தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களிலே இதுபோல் 30 லட்சம், 20 லட்சம் பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக எந்தக் குறிப்பும் இல்லை!
தமிழகத்திலே உரத்தட்டுப்பாடு என்றும் ஜெயலலிதா கூறியிருந்தார். அந்தச் செய்தியாவது உண்மையா? 2008 ஜனவரி 29ம் தேதியன்று உர இருப்புகள் யூரியா 62,502 மெட்ரிக் டன். டி.ஏ.பி (டை-அமோனியம் பாஸ்பேட்) 1,922 மெட்ரிக் டன். பொட்டாஷ் 10,519 மெட்ரிக் டன்.
எனவே உரத் தட்டுப்பாடு எதுவும் தமிழகத்திலே இல்லை என்பதும், ஜெயலலிதா சொல்லி வரும் பல்வேறு பொய்களில் இதுவும் ஒன்று என்பதும் இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
வெற்றி முகட்டை எட்டியிருக்கிறது - இடையில் வீழ்ந்து இன்று எழுந்துள்ள இன்பத் தமிழகம்.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications