கொலை வழக்கில் லாலு கட்சி எம்.பிக்கு ஆயுள் தண்டனை

தெற்கு பீகாரில் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர் அஜீத் சர்கார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ ஆவார். கடந்த 1998ம் ஆண்டு புர்னியா பகுதியில் அஜீத் சர்கார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து பப்பு யாதவ், ராஜன் திவாரி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் 88 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். ஆனால் விசாரணையின்போது 27 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த பாட்னா கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று பப்பு யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கும் கடும் ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தது.
தீர்ப்பை அளித்த நீதிபதி ஸ்ரீவத்சவா, மூன்று பேருக்கும் தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதுதவிர ரஞ்சன் திவாரிக்கு தனியாக 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
பப்பு யாதவ் தற்போது டெல்லி திகார் சிறையிலும், ராஜன் திவாரி மற்றும் 3வது குற்றவாளியான அனில் யாதவ் ஆகியோர் பியூர் (பாட்னா) சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications