கிரிக்கெட் வீரர்கள் ஏலம் தேசிய அவமானம்-சரத் யாதவ்
டெல்லி: கிரிக்கெட் வீரர்களை ஏலம் விட்டிருப்பதற்கு ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
கிரிக்கெட் வீரர்கள் பெரும்தொகைக்கு ஏலம் விடப்பட்ட தினம் தேசிய அவமான நாளாகும். இந்த ஏலத்தில் பல பணம் மட்டரகமான முறையில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.
ஏலம் விடப்பட்ட இந்திய வீரர்களுக்கு முன்பு அரசாங்கம் கோடிக்கணக்கான பணத்தை அளித்துள்ளது. ஏராளமான விருதுகளும் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஏலம் விடப்பட்டிருப்பதால் இவை அனைத்தையும் கிரிக்கெட் வீரர்கள் திரும்ப ஒப்படைக்கும்படி மத்திய அரசு உடனே உத்தரவிட வேண்டும்.
மற்ற விளையாட்டுகளைப் புறக்கணித்துவிட்டு கிரிக்கெட்டை மட்டுமே ஊக்குவிப்பதால்தான் மக்கள் தொகையில் உலகின் 2-வது மிகப்பெரிய நாடாக இருந்தும் நாம் சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டி பதக்க பட்டியலில் கேவலமான நிலையில் உள்ளோம்.
பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தை மத்திய அரசு கைப்பற்றி அதை விளையாட்டு அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் யாதவ். சரத் சொல்வதிலும் நியாயம் இருப்பது நிச்சயம்.
என் விலையை குறைத்துவிட்டார்கள்-ரிக்கி:
இந் நிலையில் தன்னை வெறும் ரூ. 1.6 கோடிக்கே ஏலம் விட்டதற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவரை கொல்கத்தா அணி வாங்கியது. இவரது அணியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் ரூ 2.8 கோடிக்கு ஹைதராபாத் அணியிடம் ஏலம் போன நிலையில், தனது விலை குறித்து ரொம்பவே வருத்தமும் ஆச்சரியமும் தெரிவித்துள்ளார் பாண்டிங்.
அவர் கூறுகையில், நான் குறைந்த விலைக்கு ஏலம் போனது ஆச்சரியமும், ஏமாற்றமும் அளிக்கிறது. இன்னும் கொஞ்சம் கூடுதலான தொகைக்கு நிர்ணயம் செய்து இருக்கலாம்.
வீரர்கள் ஏலம் போன தொகையில் உள்ள வித்தியாசத்தால் எங்கள் அணி வீரர்கள் இடையே எந்தவித உரசலும் இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்திய பிரிமியர் லீக் போட்டியில் அனேகமாக ஆஸ்திரேலிய வீரர்கள் முதல் சில வருடங்கள் பங்கேற்பது கடினம் தான் என்றார்.
அதே போல இந்திய வீரர் யுவாராஜ் சிங்கும், பாண்டிங் குறைந்த தொகைக்கு ஏலம் விடப்பட்டிருப்பதற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான பாண்டிங் குறைந்த விலைக்கு ஏலம் போனது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. அவர் பாகிஸ்தான் பயணம் சென்றால் இந்த போட்டி தொடரில் விளையாடுவது சந்தேகம் என்பதால் அவர் குறைந்த தொகைக்கு ஏலம் போய் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
எனக்கு வழங்கப்பட்டுள்ள ஏலத் தொகை சரியானது தான் என்றார்.
சைமண்ட்ஸ் ஆச்சரியம்:
ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் சைமண்ட்ஸ் கூறுகையில், ஹைதராபாத் அணி என்னை அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னை விட பாண்டிங் குறைவான தொகைக்கு ஏலம் போய் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
எதுக்காக எனக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நானாக எதுவும் கேட்கவில்லை. இது அவர்களாக தரும் பணம் என்றார்.
பாக். செல்ல சைமண்ட்ஸ் மறுப்பு:
இந் நான் பாகிஸ்தான் செல்ல மாட்டேன் என சைமண்ட்ஸ் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
பாகிஸ்தான் செல்வது குறித்து நான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அங்குள்ள சூழ்நிலையை பொறுத்து தான் செயல்பட முடியும். என்னை பொறுத்தவரை பாதுகாப்பு தான் முக்கியம். அங்கு பிரச்சனை ஏற்படலாம் என நம்புகிறேன். எனவே பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை.
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் என்னால் விளையாட முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications