For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னை அம்மா என அழைப்பது ஏன்?: ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக என்ற இயக்கத்தை தாயாக இருந்து காப்பாற்றுவதால்தான் நீங்கள் என்னை அம்மா என்று அழைக்கிறீர்கள் என ஜெயலலிதா கூறினார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக சென்னை பூந்தமல்லி செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் 60 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்தார்.

மேலும் முன்னாள் அமைச்சர் முத்துச்சாமியின் மகன் உள்பட 5 அதிமுக பிரமுகர்களின் குடும்பத் திருமணத்தையும் நடத்தி வைத்த ஜெயலலிதா பேசுகையில்,

அதிமுக கற்பக விருட்சம்:

போயஸ் தோட்டத்திலிருந்து இந்த புனித ஜார்ஜ் பள்ளியை நோக்கி நான் வருகின்ற வழியெல்லாம் கண்டது மனித நதிகள். இந்த திடலுக்கு வந்த உடன் நான் காண்பது மக்கள் கடல்.

என் தந்தை தனது 42வது வயதில் மறைந்தார். என் தாயார் 41வது வயதில் மறைந்தார். என் அண்ணன் 49வது வயதில் மறைந்தார். நான் இன்று 60 வயது நிரம்பி, 61வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.

இதற்கு என் தாயாரின் ஆசியும், என் அரசியல் ஆசான் எம்ஜிஆரின் அருளாசியும் தான் காரணம். நீங்கள் என் மேல் வைத்திருக்கும் ஈடு இணையற்ற அன்பு தான் காரணம்.

என்னிடத்தில் உங்களை பார்க்கலாம்...

என்னிடத்தில் நீங்கள் என்னை பார்க்கவில்லை. உங்களை பார்க்கிறீர்கள். உங்களிடத்தில் நான் என்னையே பார்க்கிறேன். இந்த பாசப்பிணைப்பு தான் நம்மிடையே இன்று இந்த அன்பு சந்திப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கைமாறு கருதாத இந்த பாச பரிமாற்றத்தை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இது என் 60வது பிறந்த நாள் விழாக் கோலமா? இல்லை 65 ஜோடிகளின் மகத்தான மணவிழா கோலமா? என்றால் இரண்டும்தான்.

அறம் எனப்படுவதே இல்வாழ்க்கை என்னும் வள்ளுவப் பெருமானின் வாக்கிற்கு இணங்க இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அம்மா வீட்டு சீர்வரிசை...

இந்த 60 மணமக்களுக்கும் அம்மா வீட்டு சீர்வரிசையாக 60 விதமான பொருட்களை வழங்கி இருக்கிறேன். இப்படி இலவச திருமணங்களை நடத்துவதில் இணையற்ற வரலாறு படைத்தது அதிமுக என்பதை இந்த நாடே அறியும்.

மற்றவர்கள் இந்த சாதனையை படைத்ததுண்டா? வாங்கியே பழக்கப்பட்ட கைகள் பிறருக்கு கொடுக்குமா? எப்படி பெறலாம் என்ற எண்ணம் எப்போதும் அவர்களுக்கு, எப்படி தரலாம் என்ற எண்ணம் எப்போதும் நமக்கு.

ஈந்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரரான எம்ஜிஆரின் வாரிசுகள் நாம். வாங்கி சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர்கள் அவர்கள்.

இந்த 60 ஜோடி மணமக்களில் எம்ஜிஆரால் பெயர் சூட்டப்பட்ட குழந்தை ஒன்று மணமகனாகவும், நான் பெயர் சூட்டிய பெண் குழந்தை மணமகளாகவும் இப்பொழுது வீற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரு காலத்தில் வளமோடு இருந்து இன்னொரு காலத்தில் வாடிப் போகும் மரமல்ல நமது இயக்கம். இது கால ஓட்டத்தில் காய்ந்து போகாத கற்பக விருட்சம். எந்த வேடனாலும் இதற்கு குறிவைக்க முடியாது. எந்த விஷ அம்புகளாலும் இதனை காயப்படுத்த முடியாது.

காரணம் இது ஒரு கற்பக விருட்சம். இது வாடாத மரம். இதனை வளர்த்தது ஒரு தேயாத சந்திரன். தேய்வே அறியாத தென்னாட்டு சந்திரன். எம்ஜிஆர் தோற்றுவித்த கட்சி இது. உலகம் முழுவதும் இலையுதிர் காலம் வந்தாலும் நம் கட்சிக்கு என்றென்றைக்கும் வசந்த காலம் தான். அதனால் என்றும் உங்களுக்கும் வசந்த காலம் தான்.

'அம்மா அம்மா' என்று அழைக்கிறீர்கள்...

எம்ஜிஆரை தொடர்ந்து இந்த கட்சி என்னும் விருட்சத்தின் காவல் பொறுப்பை ஏற்றிருப்பது உங்கள் சகோதரியான நான். இந்த இயக்கத்தில் தாயாக இருந்து காப்பாற்றுவதால்தான் நீங்கள் என்னை அம்மா என்று அழைக்கிறீர்கள்.

எம்ஜிஆர் உருவாக்கிய இந்த கட்சியை ஆதிக்க கழுகுகளிடமிருந்தும், அடாவடி ஓநாய்களிடமிருந்தும், அக்கிரமக்கார மலைப் பாம்புகளிடமிருந்தும் நான் காப்பாற்றி வருகிறேன்.

ஒரு குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பு அம்மாவிற்கு உண்டு என்ற நெப்போலியன் வாசகத்தின்படி கட்சியின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு உண்டு.

இந்த இயக்கத்திற்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்பதால் தான் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை ஆகியவற்றை உருவாக்கி இருக்கிறேன். இளைஞர்கள் இல்லாமல் எந்த தேசமும் இருக்க முடியாது. மூத்தோர் இல்லாமல் உயரிய தேசம் உருவாக முடியாது.

சத்தியத்தால் இயற்றப்பட்டு துணிச்சலால் மிக உயரத்தில் தூக்கப்பட்டிருக்கும் நமது லட்சிய தீபம் நாட்டிற்கே வழிகாட்டும் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X