சேது திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி: பதில் மனுவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பதில் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது.
இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதியின் கோரி்க்கையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக் கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு்ள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்தும், ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கோரியும் உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் ராமர் இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கருத்து தெரிவிக்கப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து அந்த அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றது. புதிய பதில் அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டது. இதை தொடர்ந்து புதிய பதில் அறிக்கையை தயாரிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.
மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இதற்காக குழு அமைத்தப்பட்டது. இந்தக் குழுவின் கூட்டங்களில் திமுகவுக்கும் சில மூத்த அமைச்சர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சோனியாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் அம்பிகா சோனி இத் திட்டத்தை ராமர் பாலம் வழியாக தவிர்த்துவிட்டு வேறு பாதையில் நிறைவேற்றலாம் என்று கோரினார்.
இதை திமுகவின் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு மிகக் கடுமையாக எதிர்த்தார். இத் திட்டத்தையே முடக்க முயலும் சக்திகளுக்கு அம்பிகா போன்றவர்கள் துணை போவதாக பாலு தாக்கினார்.
இதனால் அமைச்சரவைக் கூட்டத்திலிருந்தே வெளியேறினார் அம்பிகா. பாலுவுக்கு கபில் சிபல் உள்ளிட்ட அமைச்சர்கள் முழு ஆதரவு தந்தனர்.
இதனால் இந்தக் குழு எந்த முடிவும் எடுக்காமல் இழுத்தடித்தது. இதனால் சேது திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்று பேச்சு எழுந்தது.
ஆனால், இத் திட்டத்தை அதே பாதையில் நிறைவேற்றியே ஆக வேண்டும், மிகவும் தேவைப்பட்டால் மட்டும் வேறு பாதையில் நிறைவேற்றலாம் என முதல்வர் கருணாநிதி தொடர்ந்து மத்திய அரசைக் கோரி வந்தார்.
இந் நிலையில் ஒரு வழியாக பதில் அறிக்கையை மத்திய அரசு தயாரித்துவிட்டது. நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
அதில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய பதில் அறிக்கைக்கு ஒப்புதல் தரப்பட்டது. புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள பதில் அறிக்கை விரைவில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
இந்த பதில் அறிக்கையில், ராமர் இருந்தாரா இல்லையா என்பது போன்ற இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வாசகங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்ற அம்சம் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய வழித்தடத்தில் மட்டுமே இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும், மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications