• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை நோக்கியே தொழிற்சாலைகள்-கருணாநிதி வருத்தம்

By Staff
|

Karunanidhi
சென்னை: தமிழகத்தில் அமையும் தொழிற்சாலைகள் எல்லாம் சென்னையை சுற்றியே அமைவது வருத்தம் தருவதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். எல்லா மாவட்டங்களிலும் பரவலாக தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கையில் இறங்கப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்து கருணாநிதி பேசுகையி்ல்,

இந்த குடிநீர் திட்டத்தை நிறைவேற்றிய பெருமை திமுக ஆட்சிக்கு உண்டு என்பதை வரலாறு என்றும் மறுக்காது. ஆனால் இதை நிறைவேற்றச் சொல்லி எத்தனை வேண்டுகோள்கள், கோரிக்கைகள், உரத்த குரல்கள் எழுப்பப்பட்டன என்பதை நான் இங்கே சொல்லாமல் இருக்க முடியாது.

அப்படிப்பட்ட குரலிலே ஒன்றுதான் மைச்சர் கோ.க.மணியினுடைய குரல் என்பதையும் நான் இங்கே சுட்டிக்காட்டுவதுதான், அவரே குறிப்பிட்டதைப்போல அரசியல் நாகரிகமாகும்.

அரசியல் நாகரிகம் என்பது எப்பொழுதும் ஒருவழிப் பாதையல்ல. அது இருவழிப் பாதை. நாம் எந்த காரியத்தை இன்றைக்கு செய்திருக்கிறோமோ, அந்த காரியத்திற்கு யார் யார் துணை நின்றார்களோ அவர்களையெல்லாம் பாராட்டுவதும், போற்றுவதும், புகழ்வதும் அரசியலிலே நாம் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம்.

ஸ்டாலினுக்கு பாடம்:

இந்த திட்டம் விரைவில் நிறைவேறும் என்று தம்பி ஸ்டாலின் இங்கே குறிப்பிட்டார். அவர் எப்போதும், நிறைவேற வேண்டியதை, எப்பொழுது நிறைவேறும் என்று கேட்டால், தேதியை கொஞ்சம் தள்ளித்தான் சொல்வார்.

ஒரு இரண்டாண்டு காலம் ஆகும் என்று சொல்லுவார். நான் அப்போதே ஓராண்டில் முடியும் என்று இதயத்திலே எழுதிக் கொள்வேன்.

அப்படித்தான் திருச்சிக்கு பக்கத்திலே ராமநாதபுரம் மாவட்டத்திலே இப்படிப்பட்ட ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நாங்கள் தொடங்கும்பொழுது, இரண்டாண்டு காலத்திலே இரண்டரை ஆண்டு காலத்திலே இதை முடித்து வைக்கிறோம் என்று அதிகாரிகள் சொன்னார்கள், பொறியாளர்கள் சொன்னார்கள். அந்த விழாவில் ஸ்டாலின் பேசும்போது, நீங்கள் இரண்டாண்டில் முடித்தால் உங்களுக்கெல்லாம் பரிசுப் பொருள் வழங்குவேன் என்று சொன்னார்.

ஆனால் இப்போது, ஓராண்டு 11 மாதத்திலே முடியும் என்று சொல்லியிருக்கிறார். 11 மாதம் என்பதும் அநேகமாக இரண்டாண்டுதான். அப்பாவை ஏமாற்ற முடியாது என்று நான் மகனுக்குச் சொல்லிக் கொள்கிறேன். ஓராண்டு 11 மாதம் என்றாலும் இரண்டாண்டுதான்.

உனக்கு நான் பாடம் நடத்த வேண்டியிருக்கிறது, ஒரு ஆண்டுக்கு 12 மாதங்களப்பா. 11 மாதம் என்றால் ஓராண்டில் முடிந்ததாக அர்த்தமல்ல' என்று நான் சொல்லித் தரவேண்டியிருக்கிறது.

பக்குவப்படட்டும்...:

இருந்தாலும் அமைச்சர் துரைமுருகன் இங்கே குறிப்பிட்டதைப்போல், நான் என்னுடைய அமைச்சரவையில் ஸ்டாலினை தாமதமாகத்தான் அமர்த்தினேன். ஏற்கனவே ஒரு 5 ஆண்டு காலத்திற்கு முன்பு, என் தலைமையிலே அமைச்சரவை அமைந்தபோது, காங்கிரஸ் நண்பர்கள் எல்லாம் கூட, ஸ்டாலின் அமைச்சரவையிலே இடம் பெறவேண்டும் என்று என்னிடத்திலே வலியுறுத்திச் சொன்னார்கள்.

நான்தான், இன்னும் கொஞ்சம் பக்குவப்படட்டும். இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்துக் கொள்ளட்டும்' என்று சொன்னேன். நான் சொன்னதுதான் சரி என்பதை தம்பி ஸ்டாலின் இன்றைக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார்- பக்குவப்பட்டு, பயிற்சியுமெடுத்து.

இந்த இரண்டாண்டு காலத்தில் பனிரண்டுக்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அந்த ஒப்பந்தங்களின் பயனாக ஏறத்தாழ 20 லட்சம் பேருக்கு இன்னும் இரண்டாண்டு காலத்திலே தமிழகத்திலே வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சென்னையே சுற்றியே தொழில்கள்:

நம் மக்களுக்கு இருக்கின்ற வருத்தத்தை, கவலையைப் பகிர்ந்து கொண்டு சொல்கிறேன். வருகின்ற தொழில்கள் எல்லாம் சென்னையை நோக்கித்தான் வருகின்றன, சென்னையை சுற்றித்தான் வருகின்றன.

அந்த தொழில்கள் எல்லாம் எல்லா மாவட்டங்களுக்கும் பரவலாக வரவேண்டும் என்கின்ற எண்ணம் நம் மக்களுக்கு இருக்கிறது.

அந்த மக்களுக்கு இருக்கின்ற எண்ணத்தை நானும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆகவே இன்றைக்கு இந்த விழாவில் உறுதியளிக்கிறேன். இனி அடுத்தடுத்து வருகின்ற தொழில்களிலே பெரும்பாலான தொழில்கள் சென்னையிலே மாத்திரமல்ல, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக அந்த தொழில்களெல்லாம் உருவாக்கப்படும் என்பதை ஒரு உறுதி மொழியாக இந்த விழாவில் நான் அறிவித்திடக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பாமகவுக்கு 'சான்ஸ்' தர மாட்டேன்..:

பல்வேறு கட்சிகளை சேர்ந்த நமது நண்பர்கள் எல்லாம் இந்த அரசின் நல்ல காரியங்களை சிலாகித்துப் பேசுவார்கள். அதிலும் பாமக தலைவர் கோ.க.மணி அவர்கள், நல்லவைகளை செய்தால் நாங்கள் ஆதரித்துக் கொண்டுதான் இருப்போம் என்று சொன்னார்.

அதில் இன்னொரு பொருள் உண்டு. எனக்கு தெரியும், நல்லவைகளை ஒருவேளை செய்யாவிட்டால் - நாங்கள் செய்யவில்லை என்று கருதினால் அதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்றும் பொருள் உண்டு.

ஆனால் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு அந்த 'சான்சை'' நான் கொடுக்க மாட்டேன். நல்லவை செய்யாமல் இருந்தால்தானே நீங்கள் எங்களை ஆதரிக்காமல் இருக்க முடியும். அந்த சான்ஸ்' தராமலேயே, என்ன இவன் நல்லவைகளையே செய்து கொண்டு போகின்றானே என்று எண்ணுகின்ற அளவிற்கு இந்த நாட்டு மக்களுக்கு நல்லவைகளை தான் இந்த அரசு செய்து கொண்டிருக்கும்.

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி:

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பத்திரிக்கைகளில் பேசும்போது, ஸ்டாலின் இந்த துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்று அரிய பல சாதனைகளைச் செய்துள்ளார் என்று குறிப்பிட்டு தந்தையைப் போல் உழைக்கிறார், தந்தையைப் போல் துறையை நடத்துகிறார், தந்தையைப் போல் பழகுகிறார், தந்தையைப் போல் திகழ்கிறார், தந்தையைப் போல் கட்சியினரை மதிக்கிறார் என்றெல்லாம் அவர் சொன்னதும் பேசியதும் பத்திரிகைகளில் வந்திருப்பதை நான் படித்தேன்.

அது என்னைப் பொறுத்தவரையில்- என்னைப் பொறுத்தவரையிலும் என்று சொல்ல மாட்டேன், ஸ்டாலினைப் பொறுத்தவரை, வசிஷ்டர் வாயால் 'பிரம்மரிஷி' என்ற பட்டம் பெற்றதாக ஸ்டாலின் கருதிக்கொள்ள வேண்டும்.

இந்த ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து ஆதரவை தரத் தயாராக இருக்கிறீர்கள். ஆனால் சில கட்சிகள் நம்மை விமர்சிப்பதிலும், நம்முடைய அரசின் பணிகளை கேலி செய்வதிலும், கிண்டல் செய்வதிலும், எதிர்ப்பதிலும் ஈடுபட்டிருக்கின்றன.

ராமதாசுடனான சந்திப்பு:

இங்கே பார்த்தீர்கள், அவர்கள் சில பேர் வெளியிலே எதிர்த்துப் பேசினாலும் மனதிற்குள்ளே நம்மீது எவ்வளவு ஆசை வைத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

நான் அண்மையிலே கூட ஒரு சந்திப்பில் (ராமதாசுடனான சந்தி்ப்பு) அதை நன்றாக அறிந்தேன். அது என்ன சந்திப்பு என்பது பாமக தலைவர் கோ.க.மணிக்கு நன்றாகத் தெரியும். வெளியிலே பேசினாலும்- உள்ளூர நாமெல்லாம் இந்த நாட்டிலே இருக்கின்ற ஏழைகளுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நம்மை விட்டால் வேறு ஆள், கதி கிடையாது என்பதை நாமே உணர்ந்தால்தான் அவர்களும் உணர முடியும். அப்படி உணர்கின்ற வகையில் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்காக, சனாதனத்தால், சாதிய வெறியால், மதப் பற்றால் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற மக்களையெல்லாம் உயர்த்துவதற்கு இதுபோன்ற இயக்கங்கள் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தால்தான் முடியும்.

ஜெவின் யாகம்-கருணாநிதி கிண்டல்:

நான் நீண்ட நாள் வாழ வேண்டுமென்று ஆசைப்படவில்லை. நான் வாழ்கிற வரையில் இந்த நாட்டிலே வாழ்கின்ற தமிழ் மக்களுக்காக பாடுபட வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறேன். சிலபேர் ஆயுள் நீளவேண்டும் என்பதற்காக ஆலயங்களுக்குச் செல்வார்கள். ஆயுள் குறைந்தாலும் பரவாயில்லை, அந்த குறைந்த ஆயுளில் நிறைந்த பணிகளை இந்த நாட்டு மக்களுக்காகச் செய்ய, ஆண்டவனே, நீ இருந்தால் எனக்கு வரம் கொடு! என்றுதான் கேட்பேனே தவிர, ஆண்டவனே எவன் வாழ்ந்தால் என்ன, எவன் போனால் என்ன, நான் வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும்' என்று நான் அர்ச்சனை செய்யவோ, அபிஷேகம் செய்யவோ ஆண்டவனைத் தேடி அலையமாட்டேன். (சமீபத்தி்ல் ஜெயலலிதா ஆயுசு விருத்தி யாகம் நடத்தியது குறிப்பிடத்தக்கது)

இப்படி எனக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாட்டையாவது புரிந்து கொள்ள வேண்டாமா, தமிழ்நாட்டிலே இருக்கின்ற பொது மக்கள், சாதாரண மக்கள், நடுநிலை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

தியாகம் செய்தவன்:

14 வயசிலே அரசியலுக்கு வந்து, பல தியாகங்களை ஏற்றுக் கொண்ட நானாகட்டும், என்னைப் போலவே என்னுடைய தம்பிமார்கள், வீரபாண்டி, வீராசாமி, துரைமுருகன், ஸ்டாலினைப் போன்றவர்களாகட்டும்- தியாகம் பண்ணியவர்கள் நாங்கள்.

ஆனால் தியாகம் பண்ணியவன் எப்பொழுது செத்தாலும் பரவாயில்லை, மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று கருதுகிறான். ஆனால் நாட்டிலே சில யாகம் பண்ணுகிற தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் நீண்ட காலம் வாழவேண்டும் என்று விரும்புவார்கள்.

அதனால்தான் எதைச் செய்தாலும், அது சொத்தை, இது சொத்தை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் அவர்களைப் பற்றிக் கவலைப்படப் போகிறீர்களா? அல்லது உங்களுக்காகவே எங்களை வருத்திக்கொண்டு காரியங்களைச் செய்கின்றோமே, எங்களைப் பற்றி நீங்கள் நினைக்கப் போகிறீர்களா?

டெல்லியே பாராட்டுகிறது:

இங்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தோழர் டெல்லிபாபு பேசும்போது கூட, நான் திரும்பிப் பார்த்தேன். பேசுவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தோழர்தானா? அல்லது நம்முடைய மாவட்ட செயலாளரா என்று கூட திரும்பிப் பார்த்தேன்.

அப்படி கழக அரசினுடைய திட்டங்களை, செயல்பாடுகளை, என்னுடைய முயற்சிகளையெல்லாம் பாராட்டிக் கொண்டிருந்தார். அவருடைய பெயரே டெல்லிபாபு. டெல்லியே பாராட்டும்போது, டெல்லிபாபுவா பாராட்டாமல் இருந்துவிடுவார்?

ஜப்பானின் உதவி:

இன்றைக்கு ஜப்பான் நாட்டிலிருந்து நமக்கு 1,330 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக ஒப்புதல் தந்திருக்கின்றார்கள் என்றால், டெல்லி அதற்காக பரிந்துரை செய்கிறது. டெல்லி நம்மை நம்புகிறது.

ஜப்பான் நாட்டிற்கு தம்பி ஸ்டாலின் சென்றால், அங்கே சென்றவுடன் மரியாதை கிடைக்கின்றது. உடனடியாக ஒப்புதல் கிடைக்கிறது. "சென்றார், வென்றார்'' என்பதைப் போல, சென்றதுதான் தெரிந்தது. வென்றது செய்தியாக காதிலே விழுந்தது. அதற்கு காரணம் என்ன? சென்றவர்களுடைய சாமர்த்தியம்.

சென்றவர்களுடைய சாமர்த்தியம் மாத்திரமல்ல, எதற்காக சென்றார்களோ, அந்த காரியத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற அரசு நேர்மையாக, நாணயமாக, ஒழுங்காக, கண்ணியமாக நடந்து கொள்ளக்கூடிய ஒரு அரசு, அது தமிழகத்திலே தொழில் வளத்தைப் பெருக்கக்கூடிய அரசு, தமிழகத்திலே நீர்வளத்தைக் காப்பாற்றக்கூடிய அரசு, தமிழகத்திலே மக்களுடைய வளத்தை எண்ணிப்பார்க்கக்கூடிய அரசு.

ஆகவே நம்பித் தரலாம் என்று வெளிநாடுகளிலே உள்ளவர்கள் தங்களுடைய ஆதரவை நம்பி வழங்குகிறார்கள். அப்படி வழங்கப்பட்ட அந்த ஆதரவின் அடையாளம் தான் இன்றைய ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X