கபாலீஸ்வரர் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம்
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கபாலீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் கடந்த ஆண்டு இடி தாக்கியது. இதில் கோபுரம் சேதமடைந்தது. இதையடுத்து அதை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி ரூ. 8 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நடந்தது. இதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
காலை 5.30 மணிக்கு யாக சாலை பூஜை நிறைவடைந்தது. 7.30 மணிக்கு புனித நீர் கலசங்கள் யாக சாலையில் இருந்து கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
கோபுரத்தின் உச்சியில் அமைந்துள்ள 9 கும்ப கலசங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. 9.05 மணிக்கு புனித நீரை கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
அப்போது வேதமந்திரங்களை ஓதினார்கள். கும்பாபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். பக்தர்கள் மீது ஸ்பிரிங்லர்' மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்து அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை ஆணையர் பிச்சாண்டி, இணை ஆணையர் தனபால், மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ நடிகர் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications